மேப்பில் ஆவணமாகும் தமிழக கலாசார இடங்கள்
தமிழகத்தில் உள்ள கலாசார இடங்களை கண்டறிந்து, கூகுள் 'மேப்'பில் ஆவணமாக்கும் பணியில், தமிழ் இணைய கல்வி கழகம் ஈடுபட்டுள்ளது. தமிழ் இணைய கல்வி கழகத்தின் மின் நுாலகம் வாயிலாக, அரிய நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நுால்கள். பாடநுால் கழக வெளியீடுகள், பழைய பருவ இதழ்கள், சுவடிகள், பாரம்பரிய, பண்பாட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. மேலும், தமிழ் மொழி கற்பிப்பதற்கான இணையவழி படிப்பு, இணையதளத்தில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான புதிய மென்பொருள்கள், எழுத்துருக்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கி, இலவசமாக பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் செய்கிறது. அந்தவகையில், 'த கவலாற்றுப்படை' எனும் தலைப்பில், தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், திருவிழாக்கள், கலாசார விழாக்கள் நடக்கும் இடங்களை, கூகுள் 'மேப்'பில் அடையாளப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதை பயன்படுத்தி, பொதுமக்கள் எளிதாக அவ்விடத்திற்கு செல்லலாம். இது தவிர, கைவினை பொருள் தயாரிப்பில் சிறப்பு வாய்ந்த கிராமங்கள், கைவினை பொருட்களின் சிறப்பியல்புகள் உள்ளிட்டவற்றையும் ஆவணப்படுத்தி, தமிழக வரைபடத்தில், ஜி.ஐ.எஸ்., முறையில் பதிவேற்றும் பணியும் நடந்து வருகிறது. அத்துடன், கோவில், தேவாலயம், மசூதி, சமண, பவுத்த வழிபாட்டு தலங்களின் படங்கள், அவை குறித்த செய்திகள், பாரம்பரிய சிற்பங்கள், ஓவியக் கூடங்கள் உள்ள இடங்கள். சிலம்பம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, தப்பாட்டம், புரவியாட்டம், படுகர் ஆட்டம், கொக்கலிக்கட்டை ஆட்டம், தெருக்கூத்து, கரகம், கும்மி, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்த்து கலைகள் நடக்கும் ஊர்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவை நடக்கும் இடங்கள், அங்கு செல்லும் வழிகள் போன்ற விபரங்களையும், பதிவேற்றும் பணி நடக்கிறது. - நமது நிருபர் -