மொபைல் போனை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள்
சென்னை:மொபைல் போன் எண்களை முடக்கி, வாட்ஸாப்பிற்கு, 'லிங்க்' அனுப்பி, 'சைபர்' குற்றவாளிகள் பணம் பறிக்க முயற்சி செய்வதாக, போலீசார் எச்சரித்துள்ளனர்.சில தினங்களுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேஷியாவுக்கு செல்ல முயன்ற, சீன வம்சாவளியைச் சேர்ந்த ஷான் பென்ங் ஹாங், லியாங் ரோஸ் ஷெங் ஆகிய சைபர் குற்றவாளிகளை, குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், ஜூலை 27ல் சுற்றுலா பயணியர் போல தமிழகம் வந்த இவர்கள், சென்னை சோழிங்கநல்லுார் பகுதியில் தங்கி, மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறிவைத்து, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடியில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டனர். அதன்பின், அவர்களின் கூட்டாளிகள் இருவர், ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோருக்கு, 'லிங்க்' அனுப்பி மோசடிக்கு முயற்சி செய்தபோது, அதற்கான கருவியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கூட்டாளிகள், தமிழகத்தின் பல பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு ஏற்ப, சைபர் குற்றவாளிகள், பொதுமக்களின் மொபைல் போன் எண்களுக்கு பரிசுப் பொருட்கள் விழுந்துள்ளதாக லிங்க் அனுப்பியும், 'ஹேக்' செய்தும், பண மோசடியில் ஈடுபட முயற்சித்து வருகின்றனர். ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன் எண் வாயிலாக, 'வாட்ஸாப்' குழுக்கள் துவங்கியும் பணமோசடிக்கு வலை விரிக்கின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.