உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரிவாஹன் செயலி போல் லிங்க் அனுப்பி போக்குவரத்து விதிமீறியதாக புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ்

பரிவாஹன் செயலி போல் லிங்க் அனுப்பி போக்குவரத்து விதிமீறியதாக புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும், 'சலான்' போல், போலி செயலி வாயிலாக சலான் அல்லது 'லிங்க்' அனுப்பி, புதுவிதமாக மோசடி செய்யப்படுகிறது. இந்த வகையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்தவர்கள், சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.இன்றைய டிஜிட்டல் உலகில், சைபர் குற்றங்களும், மோசடிகளும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் டிரேடிங், பகுதி நேர வேலை, டிஜிட்டல் அரஸ்ட் என, பல வகைகளில் மோசடிகள் நடக்கின்றன.வழக்கமாக நடக்கும் மோசடிகளை அறிந்து பொதுமக்கள் உஷாராகி வருவதால், தற்போது புதுவித மோசடி உருவாகி வருகிறது. அதில், ஒன்றாக உருவெடுத்துள்ளது தான், பரிவாஹன் செயலி மோசடி. இதில், விதிமீறல் வாகன ஓட்டிகளின் மொபைல் போன் எண்ணுக்கு 'வாட்ஸ்ஆப்'பில் குறுஞ்செய்தி அனுப்பி, அவர்கள் வங்கி கணக்கில் உள்ள தொகையை சுருட்டி விடுகின்றனர்.போக்குவரத்து போலீஸ் சார்பில், போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து, ஆன்லைனில் போலீசார் அபராதம் விதித்து, வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு 'இ-சலான்' அனுப்புகின்றனர்.அபராதத்தை செலுத்த, 'பரிவாஹன்' என்ற செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அச்செயலியை பதிவிறக்கம் செய்து வாகனத்தின் விவரங்களை பதிவு செய்தால், விதிமீறல் குறித்த படத்துடன், எங்கு நடந்தது, எப்போது நடந்தது, எவ்வளவு அபராதம் உள்ளிட்ட விவரங்கள் வரும்.இந்நடைமுறையை பின்பற்றி, போலீசார் அனுப்புவதை போலவே, போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். இவர்கள் 'வாட்ஸ் ஆப்'பில் மட்டுமே அனுப்புகின்றனர். விதிமீறிலில் ஈடுபட்டதுபோல், வாகனத்தின் போட்டோ, இடம், நேரம், அபராத தொகை என, அனைத்து விபரங்களுடன் குறுஞ்செய்தி வருகிறது. அபராதம் செலுத்துவதற்கான செயலி எனக்கூறி, போலி செயலிக்கான 'லிங்க்'கையும் 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு அனுப்புகின்றனர்.அதைப்பார்த்து உண்மை என நம்பி, அபராதம் செலுத்த வாகன ஓட்டிகள் முயற்சிக்கும் போது, வங்கி கணக்கில் உள்ள பணத்தை சுருட்டி விடுகின்றனர். அவர்கள் அனுப்பிய லிங்கில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, அபராதம் செலுத்துவதற்காக, வங்கி விபரங்களை பதிவு செய்தால், வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் மோசடி நபர்கள் எடுத்து விடுகின்றனர். இதுதொடர்பான புகார்கள், கோவை சைபர் கிரைம் போலீசுக்கு வந்துள்ளன.

சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

வாட்ஸ்ஆப்பில் வரும் லிங்க்குகளை தொடக்கூடாது. தெரியாத நபர்கள் அனுப்பும் செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. போலீசார் அபராதம் விதித்திருப்பது போல், தங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தால், 'பிளே ஸ்டோரில்' உள்ள அரசின் பரிவாஹன் செயலியை பயன்படுத்தி மட்டுமே அபராதம் செலுத்த வேண்டும். போலி செயலிகளை பதிவிறக்கம் செய்தால், தனிப்பட்ட தரவுகள், பணம் திருடு போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
மே 23, 2025 13:53

அது என்ன பரிவாஹன், குதிரை வாஹன்னு இந்தில பேர் வெச்சுக்கிட்டு. தமிழ் ஆட்சிமொழியா இல்லியா? எப்படியெல்லாம் திணிக்கிறாங்க


RAVINDRAN.G
மே 23, 2025 11:28

சைபர் கிரைம் போலீஸ் அலுவலகம் சும்மானாச்சுக்கும் இருக்குது. எந்த பயனும் இல்லை. நான் போன வருடம் ஆன்லைனில் 25 லட்சம் பணத்தை இதுபோல இழந்துவிட்டேன். பலமுறை சென்றும் எந்த பயனும் இல்லை. சோழிங்கநல்லூர் சைபர் கிரைம் போலீஸ் வெறும் அலைக்கழிப்பு மட்டும் நிச்சயம். காலை 11 மணிக்கு வரவேண்டியது சிற்றுண்டியாக பக்கோடா, போண்டா டீ காபி போன்ற இத்யாதிகள் சாப்பிடுவது, சாஸ்திரத்துக்கு ஒரு நாலு ஏமாந்த மனுதாரர்களிடம் பேசுவது. மதியம் 2 மணிக்கு பிரியாணி / சாப்பாடு சாப்பிடுவது. 3 மணிக்கு மீட்டிங் என்று வெளியே புறப்பட்டுவிடுவார்கள். ஆனால் மரியாதை குறைவாக ஏளனமாக பேசமாட்டார்கள். அனுசரணையாக பேசுவார்கள். . எத்தனை தடவை வேணாலும் நாம போலாம். அது நம் இஷ்டம். அனால் வேலை நடக்காது.


Mecca Shivan
மே 23, 2025 06:21

எனக்கும் அப்படி ஒரு சல்லான் வந்தது .. போலீசுக்கு மெயில் போட்டு அந்த குறிப்பிட்ட இடத்தில கமெரா வைத்து அது வேலை செய்கிறது என்ற அறிவிப்பு இல்லாமல் அனுப்பப்பட்ட ஒரே சல்லான் ..கடந்த எட்டு மாதத்தில் அந்த இடத்தில வேறு யாருக்கும் செல்லான் வந்தமாதிரி தெரியவில்லை ..டிராபிக் போலீசும் அருகிலுள்ள போலி கடைக்கு நான்கு மணிவாக்கில் இன்னோவாவில் வந்து ஓசியில் சாப்பிட்டு செல்வார்கள் .. அனால் முக்கிய காலை மாலை இரவு நேரங்களில் ஒரு போலீசும் இருக்கமாட்டார்கள் .தினமும் குறைந்தது ஐம்பது அல்லது அறுபது விதிமீறல்கள் நடந்துகொண்டிருக்கிறது ..இதுதான் சென்னை டிராபிக் போலீசின் லட்சணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை