பெஞ்சல் புயல், வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகை போதாது
அரியலுார்:-அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். பின், அவர் அளித்த பேட்டி:முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் ஒற்றுமையை நிலைநாட்ட உறுதி ஏற்போம். தமிழகத்தில், புயல், வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பொருள்களை இழந்து மக்கள் உள்ளனர். தமிழக முதல்வர் அறிவித்த வெள்ள நிவாரணம் ரூ.2,000 போதாது என்கிற கோரிக்கை மக்களிடம் எழுந்திருக்கிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000 நிவாரணத் தொகை அறிவித்திருக்கிற நிலையில், தமிழக மக்களிடமும் அந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை கணிவுடன் பரிசீலிக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படடோர் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணத் தொகை வழங்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு, ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. அந்தத் தொகை போதாது. அதனால், அதை உயர்த்தி ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும். வெள்ள நிவாரணமாக, தமிழகத்துக்கு, மத்திய அரசு ரூ.2,475 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வி.சி.,க்கள் சார்பில் நானும், ரவிக்குமாரும் சேர்ந்து உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராயை சந்தித்து கோரிக்கை மனை கொடுத்திருக்கிறோம். அவரும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்.தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவது ஆறுதலாக உள்ளது. இடதுசாரி சிந்தனையாளர்களின் கட்டுரைகளை தொகுத்து, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடும் நேரத்தில் அனைவருக்கும் பாராட்டுதழையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில், அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை; அதற்காக வருந்துகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.