| ADDED : அக் 26, 2025 09:26 PM
புதுடில்லி: வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மோந்தா புயலாக வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.சென்னைக்கு 720 கிமீ கிழக்கு தென்கிழக்கிலும், ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு 790 கிமீ தெற்கு தென்கிழக்கிலும், காக்கிநாடாவிற்கு 780 கிமீ தென்கிழக்கிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது.தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் தீவிர புயலாக வலுவடையும். பின், ஆந்திர கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகே தீவிர புயலாக, அன்று மாலை முதல் இரவுக்குள் கரையை கடக்கும்.இந்த நேரத்தில் 90 - 100 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில் 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.