உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேலும் வலுவிழந்தது டிட்வா புயல்; படிப்படியாக மழை குறையும்

மேலும் வலுவிழந்தது டிட்வா புயல்; படிப்படியாக மழை குறையும்

சென்னை: வங்க கடலில், சென்னை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று, காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்தது. இது இன்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் நிலையில், மழை குறைய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சென்னை எண்ணுாரில், 26 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, பாரிமுனையில், 25; ஐஸ்ஹவுஸ், 22; மணலி புதுநகர், பொன்னேரியில் தலா, 21; எண்ணுார் தானியங்கி வானிலை மையம், பேசின் பாலம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர் பகுதிகளில் தலா, 20 செ.மீ., மழை பெய்துள்ளது.

ஒரே பகுதி

வட சென்னை தானியங்கி வானிலை மையம், மணலி, செங்குன்றம் பகுதிகளில் தலா, 19; விம்கோ நகர், நுங்கம்பாக்கம், டி.ஜி.பி., அலுவலகம், மேடவாக்கம் பகுதிகளில் தலா, 18; அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கத்திவாக்கம் பகுதிகளில் தலா, 17 செ.மீ., மழை பெய்துள்ளது. வங்க கடலில் உருவான, 'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை நோக்கி நேற்று முன்தினம் நகர்ந்தது. இது, வடக்கு திசையில் செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அமைப்பு தொடர்ந்து, 6 மணி நேரத்துக்கு மேல் ஒரே பகுதியில் நிலவியது. நேற்று காலை நிலவரப்படி, இந்த அமைப்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கில், 40 கி.மீ., தொலைவில் நிலவியது. இன்று, தென் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, வட மாவட்டங்கள், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி வர வாய்ப்புள்ளது. அதன்பின், இந்த அமைப்பு காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்க வாய்ப்புள்ளது.

தரைக்காற்று

இதனால், சென்னை உட்பட வட மாவட்டங்களில், தற்போது காணப்படும் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள், புதுச்சேரியில் இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'கணிப்புகளை மீறிய மழைப்பொழிவு'

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் கூறியதாவது: வானிலை ஆய்வு மையம், தனியார் ஆய்வாளர்கள் கணிப்புகளை தாண்டி, ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு தங்கியதால், வட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. சென்னையில் வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்பு படையின், 11 அணிகள் வந்துள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் சொல்லும் இடங்களுக்கு செல்ல, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில், 54 இடங்களில் நிவாரண முகாம்களில், 3,534 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால், இதுவரை சுவர் இடிந்து விழுந்து, 2 பேர், மின்சாரம் தாக்கி, 2 பேர் என, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தால், 582 கால்நடைகள் உயிரிழந்தன; 1,601 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. தற்போது வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 2.11 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. மழைநீர் வடிந்த பின், மாவட்ட நிர்வாகம் சேத விபரங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்ததும் நிவாரணம் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை