உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன: மாஜி அமைச்சர்

தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன: மாஜி அமைச்சர்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பேசியதாவது:முன்னாள் அமைச்சர் வளர்மதி: முதல்வர் ஸ்டாலின் எரிமலை மீது அமர்ந்திருக்கிறார். அவரது ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. பழனிசாமி முதல்வரானதும், சர்க்காரியா கமிஷன் போல, ஸ்டாலின் கமிஷன் அமைக்கப்படும்.முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: அ.தி.மு.க.,வில் எந்த கருத்து வேறுபாடும், சலசலப்பும் இல்லை. ஊடகங்கள், பத்திரிகை செய்திகளை தொண்டர்கள் மறந்து விடுங்கள். இதை வைத்து உளவியல் ரீதியாக தொண்டர்களை பலவீனப்படுத்த பார்க்கின்றனர். நம் பலம், நம்மைவிட தி.மு.க.,வுக்கு நன்றாக தெரியும். நம் கூட்டணியை ஸ்டாலினே உருவாக்கி கொடுத்து விடுவார்.இலங்கை, வங்கதேசம், சிரியா போன்றவற்றில், குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு உள்ளது. அதேபோல் தமிழக மக்களும் பொங்கி எழுந்துவிட்டனர். அதனால்தான், அமைச்சர் மீது சேறு அடிக்கப்பட்டு விரட்டப்பட்டு உள்ளார்.முன்னாள் அமைச்சர் வேலுமணி: நான்கு ஆண்டுகளாக விளம்பரத்தில் மட்டுமே, தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இது குறித்து, தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். தைரியம் இருந்தால், தி.மு.க., தனியாக தேர்தலை சந்திக்க வேண்டும். தனியாக நின்றால், அ.தி.மு.க.,வை யாருமே ஜெயிக்க முடியாது. தி.மு.க., ஒரு முறை வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலில் மிக மோசமான தோல்வியை பெறும். தி.மு.க.,வுக்கு ஓட்டளித்த அரசு ஊழியர்கள், இந்த ஆட்சி வேண்டாம் என்கின்றனர். நாம் சரியாக வேலை செய்தால், 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்: தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கின்றனர். ஆனால், 20 சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது, அவர்களுக்கே நன்றாக தெரியும்.தேர்தல் நெருங்க, நெருங்க களம் நமக்கு சாதகமாக மாறும். பழனிசாமி தி.மு.க.,வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !