தமிழக நுகர்வோர் கோர்ட்டுகளுக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கெடு
சென்னை:'மாநில நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினரை, மூன்று மாதங்களுக்குள் நியமிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'தீர்ப்பு வழங்குவதும் அவரே; தட்டச்சு செய்வதும் அவரே. நுகர்வோர் நீதிமன்றங்களின் அவலநிலை' என்ற தலைப்பில், கடந்தாண்டு ஆகஸ்ட் 21ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. நடவடிக்கை
நுகர்வோர் நீதிமன்றங்களில் போதிய எண்ணிக்கையில் சுருக்கெழுத்தர், உதவியாளர்கள் இல்லாத நிலை, செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த செய்தி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிடும் வகையிலான இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தது.நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சரத் சந்திரன் அறிக்கை தாக்கல் செய்தார்.அதில், 'மாநில நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'கடிதம் எழுதி, 22 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிதி நெருக்கடி காரணமாக, கூடுதல் உறுப்பினர் நியமிக்கும் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என, நுகர்வோர் நீதிமன்ற தலைவருக்கு, அரசின் கூடுதல் தலைமைச் செயலர் பதில் அனுப்பியுள்ளார்' என கூறியிருந்தார்.இதை பதிவு செய்த நீதிமன்றம், காலிப் பணியிடங்களை நிரப்பாதது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''தற்போது மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு உள்ளன. கூடுதல் உறுப்பினர் நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்,'' என்றார். மாநிலத்தின் கடமை
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நுகர்வோர் ஆணைய தலைவரின் கோரிக்கையை, இன்னொரு முறை அரசு நிராகரிக்க வாய்ப்பளிக்க முடியாது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான நீதித் துறை உள்கட்டமைப்பு வழங்கப்படுவது அடிப்படை உரிமை. மேலும் அதை வழங்குவது, ஒவ்வொரு மாநிலத்தின் கடமை.எனவே, நுகர்வோர் நீதிமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினர் பதவிக்கு ஒப்புதல் அளித்து, மூன்று மாதங்களில் நியமனம் செய்வதை, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, ஆகஸ்ட் 1ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.