கொலை வழக்கில் துாக்கு தண்டனை: தீர்ப்பை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
மதுரை: கொலை வழக்கில், கீழமை நீதிமன்றம் ஒருவருக்கு விதித்த துாக்கு தண்டனை, நான்கு பேருக்கான ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. திருநெல்வேலி அருகே பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் வைகுண்டம், 45. இவர், ஒரு வழக்கில், 2022 மார்ச் 10ல் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க இருந்தார். அவர் சாட்சி கூறினால், வழக்கில் தண்டனை கிடைக்கலாம் என திட்டமிட்ட சிலர், அன்று காலை அவர் அங்குள்ள கால்வாயில் குளிக்க சென்றபோது அவரை வெட்டி கொலை செய்தனர். திருநெல்வேலி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, இரு பெண்கள் உட்பட, 8 பேரை கைது செய்தனர். திருநெல்வேலி நீதிமன்றம் விசாரித்து, 2025 மார்ச்சில் செல்வராஜு, 43, என்பவருக்கு துாக்கு தண்டனை விதித்தது. அந்தோணிராஜ், 46, உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை, மூன்று பேருக்கு தலா இரு மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்த வழக்கில், 8 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் பி.வேல்முருகன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகினர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது வெட்டவெளியில் நடந்த கொடூர சம்பவம். இதை அனுமதித்தால் யாரும் எதிர்காலத்தில் சாட்சியமளிக்க முன்வரமாட்டார்கள். துாக்கு தண்டனை விதிக்கக்கூடிய அரிதிலும் அரிதான வழக்கு வரம்பின் கீழ் இது வருகிறது. குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்றம் செல்வராஜுவிற்கு விதித்த துாக்கு தண்டனை, மற்றவர்களுக்கு விதித்த ஆயுள் மற்றும் சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தர விட்டனர்.