அரசு பணிகள் பாதிக்காமல் தடுக்க முடிவு
அரசு பணிகள் பாதிக்காமல் தடுக்க முடிவு
எம் சாண்ட், ஜல்லி, சிமென்ட், கட்டுமான கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால், திட்ட செலவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகிஉள்ளன. இதனால், அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பல ஒப்பந்ததாரர்கள், பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். பல இடங்களில் பெயரளவிற்கே பணிகள் நடந்து வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால், அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், திட்டமிட்ட கட்டடங்களை திறப்பதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது.இந்நிலையில், பொதுப்பணித்துறை செயலர் ஜெயகாந்தன் தலைமையில், சேப்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.அப்போது, கட்டுமான பொருட்கள் விலை உயர்வை காரணம் காட்டி, திட்ட மதிப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதுகுறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.அதேநேரத்தில், திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என, அதிகாரிகளுக்கு செயலர் உத்தரவிட்டுள்ளார்.