உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் சாந்தாவுக்கு பாரத ரத்னா மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு

டாக்டர் சாந்தாவுக்கு பாரத ரத்னா மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு

சென்னை:''மறைந்த டாக்டர் சாந்தாவுக்கு நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு முதல்வர் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்து உள்ளார்,'' என, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவரான டாக்டர் சாந்தா சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகம் திறப்பு விழா, அம்மருத்துவமனையில் நேற்று நடந்தது. சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்து மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஏராளமான விருது

இதுகுறித்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன் கூறியதாவது:சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், 1955ம் ஆண்டு குடிபெயர்ந்தது முதல், தன் வாழ்நாள் முழுதும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கேயே டாக்டர் சாந்தா வாழ்ந்து மறைந்தார். அவர் மருத்துவமனையில் வாழ்ந்த இடம், தற்போது அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சி, புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் போன்றவற்றில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.நாட்டில், புற்றுநோய் சிகிச்சை தெளிவற்றதாக இருந்த நேரத்தில், பன்நோக்கு சிகிச்சை அணுகுமுறையை புகுத்திய முன்னோடி அவர். அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர், உலக சுகாதார நிறுவனத்தில் புற்றுநோய் ஆலோசனை குழு மற்றும் புற்றுநோய்க்கான மாநில ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.மேலும், இந்திய புற்றுநோய் சங்கத்தின் தலைவராகவும், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய - பசிபிக் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவராகவும், 15வது ஆசிய - பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து, டாக்டர் சாந்தா ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 1986ல் பத்மஸ்ரீ, 2006ல் பத்மபூஷண் மற்றும், 2016ல் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோல, மாநில அரசு, 2013ல் அவ்வையார் விருது வழங்கியது.

உறுதி

மேலும், ஆசியாவின் உயர்ந்த விருதாக கருதப்படும், பொது சேவைக்கான, 'ரமோன் மகசேசே' விருது உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார்.தற்போது, நாட்டின் உயரிய விருதான, 'பாரத ரத்னா' விருது வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு முதல்வரும் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்து உள்ளார். விரைவில் டாக்டர் சாந்தாவுக்கு, 'பாரத ரத்னா' விருது கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசன் மவுலானா, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், 'தி இந்து' குழும இயக்குநர் என்.ராம், அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் ராஜா மற்றும் செயல் துணை தலைவர் விஜய்சங்கர், டாக்டர் சுவாமிநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !