உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு அனுமதியில் தாமதம்; தமிழகத்தில் அகழாய்வு பணி பாதிப்பு

மத்திய அரசு அனுமதியில் தாமதம்; தமிழகத்தில் அகழாய்வு பணி பாதிப்பு

சென்னை: மத்திய தொல்லியல் துறையின் ஆலோசனை வாரியமான, 'கபா' ஆலோசனைக் கூட்டம் தாமதம் ஆவதால், தமிழக அகழாய்வுக்கான அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய பல்கலைகள், கல்வி நிறு வனங்கள், மாநில அரசுகள் ஆகியவற்றை இணைத்து, 'கபா' எனும் தொல்லியல் ஆய்வு வாரியத்தை, மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இந்த வாரியம், நாட்டில் அகழாய்வுகள் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகள் செய்வதையும், கண்காணிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இதன் 38வது ஆலோசனைக் கூட்டம், கடந்த ஏப்ரலில், டில்லியில் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில், மாநிலங்களில் நடக்க உள்ள அகழாய்வுகள் குறித்து, அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் கீழடி, துாத்துக்குடி மாவட்டம் பட்டணமருதுார், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார், நாகப்பட்டினத்தில் உள்ள புத்தவிகாரம், கடலுார் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனுார், கோவை மாவட்டம் வெள்ளளூர், சேலம் மாவட்டம் தெலுங்கனுார் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய, தொல்லியல் துறை ஏற்கனவே அனுமதி கோரி உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தால், வரும் ஜனவரியில் அகழாய்வுகள் துவங்கும். அதன்பின், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கான நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். அதனால், 'கபா'வின் கூட்டம், கடந்த மாதத்தின் இறுதியிலோ, இந்த மாதத்தின் துவக்கத்திலோ நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது; இதுவரை நடக்கவில்லை. அதனால், ஜனவரியில் அகழாய்வை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறுகையில், 'தமிழக அரசு, அடுத்தாண்டு எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்க தயாராக உள்ளது. மத்திய அரசு, அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் அனுமதி அளித்தால், மழைக்காலம் முடிந்ததும் அகழாய்வை துவக்க வசதியாக இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை