இடுபொருள் கொள்முதலில் இழுபறி வீட்டு தோட்டம் திட்டத்திற்கு சிக்கல்
சென்னை:முதல்வரின் வீட்டு தோட்டம் திட்டத்திற்கு, இடுபொருட்கள் கொள்முதல் செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவற்றை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தோட்டக்கலை துறை மூலமாக, வீட்டு தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டது. பழத்தொகுப்பு
இத்திட்டம், சென்னை உள்ளிட்ட நகரங்களில், பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திட்டத்தை, தி.மு.க., அரசு, 'முதல்வரின் வீட்டு தோட்டம் திட்டம்' என, பெயர் மாற்றி செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கொய்யா, எலுமிச்சை, பப்பாளி செடிகள், 'பழத்தொகுப்பு' என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரை விதைகள், 'காய்கறி விதை தொகுப்பு' என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.'மாடி தோட்ட தொகுப்பு' என்ற பெயரில், ஆறு செடி வளர்ப்பு பைகள், ஆறு தென்னை நார் கழிவு கட்டிகள், ஆறு வகையான காய்கறி விதைகள், உயிர் உரங்கள், வேப்ப எண்ணெய், செடி வளர்ப்பு கையேடு போன்றவை வழங்கப்படுகின்றன. ஒரு தொகுப்பு, 50 சதவீதம் மானியத்தில், 599 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.கடந்த ஆட்சியில், தென்மேற்கு பருவமழை துவங்கும் நேரத்தில், இடு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு, கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான இடுபொருட்கள், இன்னும் தோட்டக்கலை துறையால் கொள்முதல் செய்யப்படவில்லை. அதனால், திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல், மாடித் தோட்ட இடுபொருட்கள் வாங்க, தோட்டக்கலை பண்ணைகளுக்கு பொதுமக்கள் சென்று ஏமாந்து வருகின்றனர். கூடுதல் விலை
இவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், அங்குள்ள அலுவலர்களும் திணறி வருகின்றனர். இடுபொருட்கள் கிடைக்காததால், மக்கள் தனியார் பண்ணைகளுக்கு செல்கின்றனர். அங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இடுபொருட்கள் கொள்முதலுக்கு மேலும் தாமதமாகும் என்பதால், அரசின் கேள்வியை தவிர்க்க, பழச்செடி, காய்கறிகள் விதை தொகுப்புக்கு, 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்கலாம் என, தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. தனியாருக்கு ஆதரவாகவே இடுபொருட்கள் கொள்முதலில், தோட்டக்கலை துறையினர் தாமதம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.