டெல்டா மாவட்ட நீர்வழித்தடங்கள் துார்வாரும் பணி: 2 நாளில் முடிக்க கெடு
சென்னை: டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர்வழித்தடங்களை துார்வாரும் பணியை, இரண்டு நாட்களில் முடிக்க, 700 ஒப்பந்ததாரர்களுக்கு, நீர்வளத் துறை கெடு விதித்துள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி காலம் துவங்கியுள்ளது. இதற்காக, சேலம், மேட்டூர் அணையில் இருந்து, வரும், 12ம் தேதி முறைப்படி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அணையை திறந்து வைப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் சேலம் செல்லவுள்ளார். மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர், தஞ்சாவூர் கல்லணைக்கு மூன்று நாட்களில் வந்து சேர வேண்டும். அன்றைய தினம், அதில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.இந்த நீர், டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு, 30 நாட்களில் செல்ல வேண்டும். அப்போதுதான் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு, டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன கால்வாய்கள் துார்வாரும் பணிக்கு, 98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், 882 இடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 5,022 கி.மீ.,க்கு நீர்வழித்தடங்களை துார்வாருவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், 1,380 கி.மீ.,க்கு நீர்வழித்தடங்கள் துார்வாரப்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்ட நீர்வழித்தடங்கள் துார்வாரும் பணியில், 700க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மேட்டூர் அணை திறப்புக்கான காலம் நெருங்குவதால், அடுத்த இரண்டு நாட்களில் பணிகளை முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பொறியாளரிடம் பணி நிறைவு சான்று பெறும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே, இம்மாத இறுதிக்குள் நிதி விடுவிக்கப்படும் என்றும், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் கூறியுள்ளார்.