30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் சரிவு
சென்னை:பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு, தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டதால், 30 மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.நீர்வளத்துறையின்கீழ், நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் செயல்படுகிறது. இதன் சார்பில், ஒவ்வொரு மாதமும், நிலத்தடி நீர்மட்டம் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது.இதற்காக, சென்னை நீங்கலாக, 37 மாவட்டங்களில், ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், நிலத்தடி நீர் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் மாத இறுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலுார், நீலகிரி, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.மழை அதிக அளவில் பெய்ததால், இம்மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது தெரிய வந்துள்ளது. எனினும், நீர்மட்ட உயர்வு, ஒரு மீட்டருக்கு குறைவாகவே உள்ளது. அநேரத்தில், பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு, தொடர்ந்து தண்ணீர் எடுத்ததால், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கடலுார் உள்ளிட்ட 30 மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.ஒரு மீட்டருக்கு குறைவாகவே, நீர்மட்ட சரிவு உள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே, நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.