உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் : அறநிலையத்துறை யோசிக்க ஐகோர்ட் அறிவுரை

பெரிய கோவில்களை பராமரிக்க தேவஸ்தானம் : அறநிலையத்துறை யோசிக்க ஐகோர்ட் அறிவுரை

சென்னை: 'தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிக்க, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்த, தேவஸ்தானங்கள் அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது' என, ஹிந்து அறநிலையத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரம் எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட, 2023ம் ஆண்டு செப்., 14ல், அறநிலையத் துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''வணிக வளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படாது என, ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவில் ராஜகோபுரம் முன், பக்தர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்த, மாற்று திட்டம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோவில் முன் கட்டுமானம் மேற்கொள்ளப்பட உள்ள பகுதியை, இந்த அமர்வில் உள்ள நீதிபதிகள் நேரில் பார்வையிட வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோவில்கள் கலை நயமிக்கவை. அவை, நாட்டின் சொத்துக்கள். இங்குள்ள கோவில்களை காண, தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, உரிய இடங்களில் செய்து கொடுப்பது, அரசின் கடமை. அருணாசலேஸ்வரர் கோவிலை விட்டு தொலைவில், அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றனவா என, அறநிலையத் துறை கண்டறிந்து தெரிவித்தால், அங்கு வணிக வளாகம் கட்டலாம். கோவிலுக்கு அருகில் கோவில் நிலமாக இருந்தாலும் சரி, அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் சரி, எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களை பராமரிப்பது, பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவது போன்றவற்றுக்காக, திருப்பதி கோவிலில் உள்ளதுபோல் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை செப்., 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பழநி வழக்கையும், விசாரிக்க கோரிக்கை

முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின் போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: பழநி கோவில் செயல் அலுவலர் பணிபுரிவது சட்டவிரோதம் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த 2020ம் ஆண்டு செப்., 22ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அறநிலையத் துறை கமிஷனர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, கோவில் நிர்வாகத்தை, அறங்காவலர் வசம் ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிட்டனர். மேலும் வழக்கில், பெரிய கோவில்களின் நிர்வாகத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என கூறி, அதுதொடர்பான 12 கேள்விகளை எழுப்பினர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுநாள் வரை, செயல் அலுவலர் தான் இருந்து வருகிறார். இந்த வழக்கையும் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஆக 29, 2025 10:22

தமிழக பெரிய கோவில்கள் கட்டியது தென் மாநில, இந்திய மக்கள். இதனை மாநில அறநிலைய துறை நிர்வாகிப்பது குற்றம். திரு கோவில்கள் பராமரிப்பு, பாதுகாப்பிற்கு தேவஸ்தான போர்டு கட்டாயம். ஐகோர்ட் அறிவுரை சிறந்தது. இதனை அமுல்படுத்த உத்தரவிட முடியும். மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். திராவிட இயக்கம் நாஸ்திக கொள்கை. இவர்கள் கோவில் வாசலில் இருக்க வேண்டும்.


அன்புடன்
ஆக 29, 2025 08:43

சொல்லி விட்டீர்கள்...இதோ யோசிக்க ஆரம்பிக்கும்...70 வருடம் கழித்து நல்ல yoosanai நீங்கள் சொல்லுங்கள்


Ramesh
ஆக 29, 2025 07:35

ஐயா நீதிமான்களே உங்களுக்கு ஏதாவது வசதி குறைவு இருக்கிறதா என்று சொல்லுங்கள் அதை உடனே கவனிக்கிறோம்.


முக்கிய வீடியோ