| ADDED : ஆக 26, 2026 03:22 AM
சென்னை: இந்திய தபால் துறையின் சேவைகளை, பயனாளிகள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பெறும் வகையில், 'டாக் மித்ரா, டாக் சேவா' செயலிகளின் 'டிஜிட்டல்' பரிவர்த்தனைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள, 1.4 லட்சத்திற்கும் அதிகமான கிளை தபால் அலுவலகங்களுக்கு, டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக, 'டாக் மித்ரா' மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டது. வீடுகளுக்கே சென்று தபால் பதிவு செய்தல், சேமிப்பு கணக்குகள், காப்பீடு மற்றும் பணப் பரிவர்த்தனைகளை காகிதமில்லா முறையில் உடனடியாக மேற்கொள்ளும் வகையில், இது மேம்படுத்தப்பட்டு உள்ளது. தபால் கண்காணிப்பு, கட்டணங்களை கணக்கிடுவது, 'பின்கோடு' எனும் தபால் இலக்கக எண்ணை கண்டறிவது மற்றும் புகார்களை பதிவிடுவது உள்ளிட்ட சேவைகளை, 24 மணி நேரமும் பெறும் வகையில், 'டாக் சேவா' செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலிகள், 'பாஷினி' தளத்தின் வாயிலாக, 23 இந்திய மொழிகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.