பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவது உகந்தது அல்ல சொல்கிறார் டி.ஜி.பி., சங்கர் ஜிவால்
சென்னை: 'வீண் விளம்பரத்திற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், செய்திகளை வெளியிடுவது உகந்தது அல்ல' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'தினமலர்' நாளிதழில் நேற்று, 'ஒரே நாளில் அ.தி.மு.க., பிரமுகர் உட்பட ஆறு பேர் படுகொலை; கேள்வி குறியாகிறது சட்டம் - ஒழுங்கு நிலவரம்' என்ற செய்தி வெளியாகி உள்ளது.* செப்., 8ல், தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லுாரை சேர்ந்த வெள்ளியப்பன், பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். கோவில் திருவிழாவில், ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத்தால், இந்த கொலை நடந்துள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்* செப்., 8ல், ராமநாதபுரம் மாவட்டம் புழுதிக்குளத்தை சேர்ந்த மோகன் என்பவரை, அவரது உறவினர் பாலாஜி உட்பட சிலர் கொலை செய்தனர். இச்சம்பவம், மே, 29ல், கொலையாளிகளின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது. இதில், ஐந்து பேர் கைதாகியுள்ளனர். * செப்., 8 இரவு, சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜெயராஜ், பெசன்ட் நகர் கடற்கரையில் உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது, கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். இதில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்* செப்., 8ல், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பாறையூரை சேர்ந்த பழனியை, சொத்து தகராறு காரணமாக, அவரது உறவினர் கண்ணாயிரம் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இதில், ஐந்து பேர் கைது. * செப்., 7ல், கோவை செல்வபுரம் போலீஸ் எல்லையில், பழைய தோட்டம் பகுதியில், அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன் விரோதத்தால் கோகுலகிருஷ்ணன் என்பவர், பிரவீன் உள்ளிட்டோரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஐந்து பேர் கைதாகியுள்ளனர். அனைத்து சம்பவங்களும், சொத்து தகராறு, உறவினர்களுக்கிடையே முன் விரோதம், திடீர் ஆவேசம் போன்றவற்றால் நடந்துள்ளதே தவிர, ஜாதி, மத மோதல்கள் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலோ, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடந்தது அல்ல.எனினும், இச்சம்பவங்களின் தொடர்புடைய நபர்கள், உடனே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.எனவே, வீண் விளம்பரத்திற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் மிகைப்படுத்தி, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்தது அல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.