தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம் சர்ச்சை பேச்சால் கட்சி தலைமை நடவடிக்கை
தர்மபுரி:சர்ச்சை பேச்சு மற்றும் தி.மு.க.,வினர் உள்ளடி வேலையால், தர்மபுரி கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர் தர்மசெல்வன், அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதை கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.தர்மபுரி, கிழக்கு மாவட்ட செயலராக இருந்த தடங்கம் சுப்பிரமணி நீக்கப்பட்டு, பென்னாகரத்தை சேர்ந்த தர்மசெல்வன் கடந்த, பிப்., 23ல் நியமிக்கப்பட்டார். பிப்., 28ல் தர்மபுரியில் செயற்குழு கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. இதில், தர்மசெல்வன் பேசிய ஆடியோ மார்ச், 1ல் வெளியானது. அதில், 'தர்மபுரி மாவட்டத்தில், நான் சொல்வதை கேட்காத அதிகாரிகள் இருக்க முடியாது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி., யாராக இருந்தாலும் என் பேச்சை கேட்கவில்லை என்றால், அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள். என்னை மீறி, எதுவும் செய்ய முடியாது. தர்மபுரி பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், இதற்கு முன் எப்படி இருந்தார் என எனக்கு தெரியாது. இனிமேல் எல்லாமே நான் சொல்வது தான்' என, அந்த ஆடியோவில் இருந்தது.இதையடுத்து, தர்மசெல்வன் மீது முன்னாள் மாவட்ட செயலர்கள் இன்பசேகரன் மற்றும் தடங்கம் சுப்பிரமணி ஆதரவாளர்கள் உச்சகட்ட கொதிப்பில் இருந்தனர். 'தர்மசெல்வன் பதவியை காலி செய்பவர்களுக்கு இன்னோவா கார் பரிசு' என, சொந்த கட்சியனரே மறைமுகமாக அறிவித்திருந்தனர். இதனால், தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., 4 அணிகளாக செயல்பட துவங்கியது. இதே நிலை நீடித்தால், வரும் சட்டசபை தேர்தலில், தர்மபுரி கிழக்கு மாவட்ட இரு தொகுதிகளிலும், தி.மு.க., எளிதில் தோற்கும் என, கட்சி தலைமைக்கு உளவுத்துறை வாயிலாக தகவல் பறந்தன. நேற்று மாலை, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வனை, அப்பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி.,யான மணியை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிப்பதாக, கட்சி தலைமை அறிவித்தது. சர்ச்சை பேச்சு, கட்சியினர் உள்ளடி வேலையால், 24 நாளில், தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை பட்டாசு வெடித்து, தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வினர் கொண்டாடினர்.