நயினார் நாகேந்திரனுக்காக தங்க கட்டிகள் விற்றீர்களா? புதுவை எம்.பி.,யிடம் போலீசார் விசாரணை
சென்னை:'நயினார் நாகேந்திரனுக்கு ஓட்டு சேகரிக்க, தங்க கட்டிகளை விற்று, நான்கு கோடி ரூபாய் கொடுத்தீர்களா' என, புதுச்சேரியை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., செல்வகணபதியிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர் உள்ளிட்டோரிடம், 4 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தனர். அந்த பணம் யாருடையது என்பது குறித்து, நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன், பா.ஜ., அமைப்பு செயலர் கேசவவிநாயகன் உட்பட, 20 பேரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சூரஜ், பங்கஜ் லால்வானி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அப்போது, 'புதுச்சேரியை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., செல்வகணபதி, 20 கிலோ தங்கக் கட்டிகளை கொடுத்து, அதை விற்று பணமாக தரும்படி கூறினார். அவருக்கு, கமிஷன் அடிப்படையில், சென்னை என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள, நகை வியாபாரியிடம், 15 கிலோ தங்கக் கட்டிகளை விற்று பணம் கொடுத்தோம். மீதமுள்ள, 5 கிலோ தங்கக்கட்டிகள் புதுச்சேரியில் விற்கப்பட்டது' என, வாக்குமூலம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, செல்வகணபதியிடம், சில தினங்களுக்கு முன், சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில், போலீசார் 10 மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நயினார் நாகேந்திரனுக்கு ஓட்டு சேகரிக்க, தங்கக் கட்டிகளை விற்று பணமாக கொடுத்தீர்களா என, கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த பணத்திற்கும், தனக்கும் சம்மந்தம் இல்லை என, செல்வகணபதி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம், 250க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் பெறப்பட்டுள்ளது. போலீசார் அதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.