அறிவாலய வாட்ச்மேனாக மாறிய தினகரன்: அ.தி.மு.க.,
சென்னை:'அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அறிவாலய வாட்ச்மேனாக மாறிவிட்டதாக, அ.தி.மு.க., கடும் விமர்சனம் செய்துள்ளது. அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க., அரசு, சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பதற்கு கூட, முட்டு கொடுக்கும் அளவிற்கு அறிவாலய வாட்ச்மேனாக, நிலைய வித்துவானாக மாறிவிட்ட தினகரனுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பற்றி பேச, எந்த அருகதையும் இல்லை. தன் கட்சி பெயரில், கொடியில், 'அம்மா' என்பதை கொண்டிருக்கும் தினகரனின் ஒவ்வொரு பேச்சும், தி.மு.க.,வை ஆதரிப்பதாக உள்ளன. அவரின் ஒவ்வொரு செயலும், ஜெயலலிதாவுக்கு இழைக்கும் துரோகம். அ.தி.மு.க., மீதும், பழனிசாமி மீதும் உள்ள தனிப்பட்ட பொறாமைக்காக, தி.மு.க.,விடம் தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, அறிவாலயம் ஏவும் போதெல்லாம், குரல் கொடுக்கும், வாலாட்டும் மற்று மொரு ஏஜென்டாக மாறி விட்ட தினகரனிடம், அவர் முன்னால் இருக்கும் நான்கு ஊடக மைக்குகளைத் தவிர, என்ன இருக்கிறது? அதுவும், 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின் இருக்காது. இந்த லட்சணத்தில், வெறும் கொடியையும், பெயருக்கு ஒரு கட்சியையும் வைத்துக் கொண்டு வெட்டிச் சவடால் பேசிக் கொண்டிருக்கும் தினகரன். ஒரு முறை பின்னால் திரும்பி பார்த்து, கால்களே இல்லாத நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கும் தன் சுயநிலையை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.