உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொழுதுபோக்கும் நாளிதழ் அல்ல தினமலர்

பொழுதுபோக்கும் நாளிதழ் அல்ல தினமலர்

'தினமலர்' பழமையையும், புதுமையையும் போற்றும் பண்பாடுமிக்க நாளிதழ். மக்கள் மனதில் என்றும் நீங்காது இடம்பெற்ற நாளிதழ். ஆற்றல்மிக்க பண்பாளர் டி.வி.ஆர்., அவர்களால், 1951ல் துவக்கப்பட்ட இந்நாளிதழ் நிறுவனம், பெரும் வளர்ச்சியோடு, மாபெரும் வெற்றியை பெற்றிருப்பது பெருமைக்குரியது. நற்றமிழை பரப்பும் நாளிதழின் பவள விழா கொண்டாட்டத்தை கண்டு, யாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 'பொழுதுபோக்கும் நாளிதழ் அல்ல தினமலர் மக்கள் பழுது நீக்கும் நாளிதழாம் தினமலர்'பாமரர் முதல் பண்டிதர் வரை, படித்து பரவசம் அடையும் நாளிதழ். மக்களால் மக்களுக்காக, மக்களே அமைத்துக்கொள்ளும் ஜனநாயகத்தின் துாணாகத் திகழ்கிறது என்றால் மிகையல்ல. மகாகவி பாரதி கண்ட கனவை நனவாக்கும் வண்ணம், மக்களுக்கு அறிவூட்டி நெறிகாட்டுகிறது.முன்னோர் மரபை பொன் என போற்றும் வகையில், மார்கழி மாதத்தில், பாவை நோன்பை சிறப்பான செய்தியாகத் தருகிறது. வ.உ.சி.,யின் தேச பக்தியையும், முத்துராமலிங்கத் தேவரின் தெய்வ பக்தியையும் போற்றும் பாங்கு பாராட்டத்தக்கது. சிறுவர்களின் சிந்தையை சீராக்கும் வகையில், 'சிறுவர் மலர்' சிறப்பாக அமைந்துள்ளது. பரந்து விரிந்த வாசகர் வட்டத்தை கொண்ட இந்நாளிதழ், வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையை, வள்ளுவர் வழி நின்று எடுத்துரைக்கிறது.'வேற்றுமையைக் களைந்து ஒற்றுமையை ஓங்கச் செய்வதிலும், உள்ளதை உள்ளபடி உரக்கச் சொல்வதிலும், முதன்மையாகத் திகழ்கிறது. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர் அருளால், நாளும் நற்றமிழ் பரப்பும், 'தினமலர்' நாளிதழ், எல்லா வகையிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.சீர் வளர் சீர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்மதுரை ஆதீன குருமகா சந்நிதானம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !