தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் -- வி.ஐ.டி., சென்னை நடத்தும் பள்ளிகளுக்கு இடையிலான செஸ் போட்டி நாளை நடக்கிறது
சென்னை:'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் வி.ஐ.டி., சென்னை இணைந்து வழங்கும், பள்ளிகளுக்கு இடையிலான, 'பட்டம் செஸ் போட்டி - 2025' நாளை நடக்க உள்ளது.சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள, வி.ஐ.டி., சென்னை கல்வி நிறுவன வளாகத்தில், காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை போட்டி நடக்கும். பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் பங்கேற்கலாம். ஒன்பது வயதுக்கு உட்பட்டோர், 11 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். நான்கு பிரிவிலும், மாணவர்களுக்கு தனியாக, மாணவியருக்கு தனியாக போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, பரிசுத் தொகை மற்றும் கோப்பை வழங்கப்படும். நான்கு முதல் 13வது இடம் வரை தேர்வு செய்யப்படுவோருக்கு, கோப்பை மட்டுமே வழங்கப்படும். பள்ளி மாணவ, மாணவியருக்கு 104 கோப்பைகள்; பள்ளிகளுக்கு 24 கோப்பைகள்; 24 பேருக்கு பரிசுத் தொகை என, மொத்தம் 152 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. 'பட்டம் செஸ் போட்டி-2025' சரியாக காலை 9:00 மணிக்கு துவங்கும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'கேன்டீன்' வசதி உண்டு. அவர்கள் போட்டிகளைப் பார்வையிட, தனி இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த மாணவர்கள் கவனத்திற்கு
* மாணவர்கள், தங்களின் சொந்த 'செஸ் போர்டை' எடுத்து வர வேண்டும்.* பள்ளி நிஜத்தன்மை சான்றிதழ், பள்ளி அடையாள அட்டை அவசியம்.* மாணவ - மாணவியருக்கு மட்டும், காலை மற்றும் மாலை நேரங்களில், தேநீர், 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படும்.
இலவச வாகன வசதி
போட்டியில் பங்கேற்போரை, போட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்ல, முக்கிய இடங்களில் இருந்து, வி.ஐ.டி., சென்னை நிர்வாகம் சார்பில், இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் புறப்படும் இடம் விபரம்: தாம்பரம் ரயில் நிலையம் முன்பு: காலை 8:00 மணி வண்டலுார் உயிரியல் பூங்கா நுழைவு வாயில் முன்பு: காலை 8:00, 8:15 மற்றும் 8:30 மணி கேளம்பாக்கம் பஸ் நிறுத்தம்: காலை 8:15 மணி. மேலும் விபரங்களுக்கு, 9944552411 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.