சென்னை: 'சென்னையில் இருந்து கோவாவுக்கு, நேரடி ரயில் சேவையை துவக்க வேண்டும்' என, சுற்றுலாப் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களில், கோவா முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்கள் முதல் முதியோர் வரை, அனைத்து தரப்பினரும் கோவா சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சென்னையில் இருந்து கோவா செல்ல, கொரோனாவுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கோவாவில் உள்ள வாஸ்கோடகாமா ரயில் நிலையத்திற்கு, வாரம் ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதற்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனாவின்போது இந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இந்த ரயில் சேவை துவக்கப்படவில்லை. இதனால், சென்னையில் இருந்து கோவா செல்லும் பயணியர், ரயிலில் செல்வதாக இருந்தால், ரயில் மாறி செல்ல வேண்டியுள்ளது.இது குறித்து, சுற்றுலாப் பயணியர் கூறியதாவது: இந்தியாவில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கோவாவுக்கு, சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. தற்போது, சென்னையில் இருந்து கோவா செல்வதாக இருந்தால், பெங்களூரு சென்று, அங்கிருந்து கோவா செல்ல வேண்டியுள்ளது. இதனால், கூடுதல் செலவு மற்றும் நேர விரயம் ஆகிறது. எனவே, பயணியர் மற்றும் சுற்றுலா செல்வோருக்கு வசதியாக, சென்னையில் இருந்து கோவாவுக்கு, நேரடி ரயில் சேவையை துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சென்னை - கோவா இடையே, நேரடி ரயில் சேவை துவங்க, பயணியரிடம் இருந்து கோரிக்கை மனு வந்துள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும்'என்றனர்.இதே போல், வேளாங்கண்ணி - வாஸ்கோடகாமா சிறப்பு ரயிலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்களிடம் எழுந்துள்ளது.