உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகங்கை கலெக்டரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்

சிவகங்கை கலெக்டரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியல்

சிவகங்கை : சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை தமிழக அரசே நடத்த வலியுறுத்தி மனு அளிக்க வந்தவர்களை கண்டுகொள்ளாததாக கூறி கலெக்டர் ஆஷா அஜித்தை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.சிவகங்கை அருகே பனங்காடி ரோட்டில் அரசு கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தாய் அறக்கட்டளை பெயரில் இல்லம் செயல்படுகிறது. இங்கிருந்த மனநலம் பாதித்த ஜெயசுதாவை 42, அங்கு பணிபுரியும் கோமதி கம்பால் அடித்த வீடியோ அக்., 21 வைரலானது. இதையடுத்து அங்கிருந்த மனநலம் பாதித்த 9 பேரை மாற்று இல்லத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் அனுப்பி வைத்தார்.ஆனால் மனநலம் பாதித்த பெண்ணை தாக்கிய கோமதியை கைது செய்யவில்லை. தாய் இல்ல நிர்வாகி புஷ்பராஜிடம் இருந்து அந்த இடத்தை மீட்டு அரசே மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை நடத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தி வந்தனர்.

மறியலில் மாற்றுத்திறனாளிகள்

இக்கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதனால் அனைத்து மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கண்ணன், குணா, கனகராஜ் தலைமையில் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நுாற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வலியுறுத்தியும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை கலெக்டரை பார்க்க அவர்கள் காத்திருந்தனர். ஆனால் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் சந்திக்காமல் மாற்று பாதையில் முகாம் அலுவலகம் சென்றார். அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலக ஆர்ச் எதிரே திருப்புத்துார் ரோட்டில் 3 சக்கர வாகனங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

அரசே இல்லத்தை நடத்த முடிவு

இதனால் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், இன்ஸ்பெக்டர் அன்னராஜா ஆகியோர் அவர்களிடம் பேசினர். பத்து நாட்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை அரசே நடத்துவது குறித்த முடிவு எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ