கப்பல் போக்குவரத்து துறையில் வெளிநாட்டு சான்றிதழ் அங்கீகரிப்பில் பாரபட்சம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மத்திய கப்பல் போக்கு வரத்து இயக்குனரகத்தின் புதிய உத்தரவால், இந்த துறையில், 20,000 பேருக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குனரகம், கடந்த வாரம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய கப்பல் துறையில் பணியாற்றும் அலுவலர்கள், அதிகாரிகள், தாங்கள் பதவி உயர்வு பெறுவதற்காக சிறப்பு பயிற்சி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தரும் அனைத்து சான்றிழ் களையும் ஏற்க முடியாது. இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள மலேஷியா, தென் கொரியா, ஸ்வீடன், பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளின் கல்வி நிறுவனங்களால் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதிலும், பயிற்சி விபரங்களை அதிகாரப்பூர்வமாக சரிபார்த்த பின்னர் தான், அவை செல்லுபடியாகும். போராட்டம் ஆனால், பனாமா, லைபீரியா, ஹொண்டுராஸ், பெலிஸ், பஹாமாஸ், குக் தீவுகள் போன்ற நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது, இந்திய கப்பல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து, டில்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து, இந்திய நீர் வழி போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலர் நரேந்திர ராவ் கூறியதாவது: இந்தியாவில் கப்பல் துறையில் பல்வேறு பிரிவுகளில், மொத்தம் 80,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 40,000 பேர், பல்வேறு நிலையில் அதிகாரிகளாக இருக்கின்றன. பேச்சு பணியில் இருக்கும் அதிகாரிகள், இந்தியா அல்லது வெளிநாடுகளின் கப்பல் பயிற்சி நிறுவனங்கள் அல்லது உயர் கல்வி நிறுவனங்களில் உரிய பயிற்சி பெற்று, சான்றிதழ்கள் அளித்து, பதவி உயர்வு பெற்று வருகின்றனர். இதற்காக, எந்த நிபந்தனையையும் மத்திய கப்பல் துறை இதுவரை கொண்டு வரவில்லை. தற்போது, மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள திடீர் புதிய உத்தரவால், 20,000 பேர் பாதிக்கப்படுவர். இதுகுறித்து, இயக்குனரக அதிகாரிகளிடம் பேசினோம். இந்த திடீர் உத்தரவை வாபஸ் பெற கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கு, பதவி உயர்வுக்காக வழங்கும் சான்றிதழ்களில் போலிகள் அதிகம் இருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர். போலியை கண்டறிந்து, நடவடிக்கை எடுப்பதில், நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.