உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓய்வூதியத்தில் திருத்தம், சலுகை ரத்து அறிவிப்பால் அதிருப்தி

ஓய்வூதியத்தில் திருத்தம், சலுகை ரத்து அறிவிப்பால் அதிருப்தி

மதுரை: வரும் 2026 முதல் ஓய்வூதியத்தில் திருத்தம், அகவிலைப்படி (டி.ஏ.,) உயர்வு, நிலுவை சம்பளம் போன்றவை ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அரசு துறைகளில் 2003க்கு முன் பணி நியமனம் பெற்று, ஓய்வு பெறுவோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். பத்தாண்டுக்கு ஒருமுறை ஊதியக்குழு நியமிக்கப்படும்போதெல்லாம் பணியில் உள்ள ஊழியர்களுக்கு சம்பள விகிதம் மாறுதல் பெறும். அதற்கேற்ப ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை என பிற சலுகைகளையும் பெறுவர். வரும் 31.12. 2025க்கு பின் பென்ஷன் திருத்தம் உள்ளிட்ட 'பென்ஷன் வேலிடேஷன்' எனும் இச்சலுகைகள் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் ரத்து செய்யப்பட உள்ளது. மத்திய அரசு கடந்த மார்ச் 25ல் நிதிமசோதா தாக்கல் செய்தபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 28 ல் அரசு கெஜட்டிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பென்ஷன் சலுகைகள் பறிபோக உள்ளதாக ஓய்வூதியர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நகரா என்பவர் தொடர்ந்த வழக்கில், 'பென்ஷன் என்பது உரிமை சாசனம்' என சுப்ரீம் கோர்ட்டில் 1978ல் அன்றைய நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. அதற்கு எதிரானதாக இந்த அறிவிப்பு உள்ளது என்று ஓய்வூதியர் சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பை செயல்படுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாலமுருகன் கூறியதாவது: ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை கட்டமைக்கும் அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பின் கவுரவமாக வாழ்க்கை நடத்த இது ஆதாரமாக உள்ளது. கனடா உள்ளிட்ட வெளிநாடுகள் பலவற்றிலும் 60 வயதுக்கு பிற்பட்ட வாழ்க்கையை அரசே ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கு ஏற்கனவே தந்த சலுகைகளையும், உரிமையையும் பறிக்கின்றனர். மதுரையில் கருத்தரங்கு தற்போதைய அறிவிப்பில் அகவிலைப்படி போன்ற அறிவிப்பு வரும்போதெல்லாம் அதனை மத்திய அரசு நினைத்தால் வழங்கலாம் என்று உள்ளது. ஆனால் முன்பு ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படியை மத்திய அரசு அறிவிக்கும். அதையே மாநில அரசும் கட்டாயம் அமல்படுத்தும் என்பதால் ஓய்வூதியர்கள் பலனடைந்தனர். இதனை வலியுறுத்தி மதுரையில் இன்று (அக்.,4) உலக மூத்த குடிமக்கள் கருத்தரங்கம் நடத்துகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை