சிறப்பு திருத்தத்திற்கு தி.மு.க., கூட்டணி எதிர்ப்பு நவ., 2ல் அனைத்து கட்சிகள் கூட்டம்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக ஆலோசிக்க, நவம்பர், 2ல், அனைத்து கட்சிகள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நடைபெற உள்ளது. தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மு.வீரபாண்டியன், முன்னாள் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. முறையான தேர்தல், வெளிப்படையான தேர்தல், உண்மையான தேர்தல் நடத்துவது தான் தேர்தல் ஆணையத்தின் ஒரே பணி. ஆனால், சமீப காலமாக தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் வாயிலாக, சந்தேகத்துக்குரிய தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு உதாரணமாக, பீஹார் தேர்தல் அமைந்துள்ளது. பீஹார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது, உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்ந்திருந்தது. தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்த பணி, நவ., - டிச., மாதங்களில் நடத்துவது சிரமம். பருவமழை பெய்து வரும் காலத்தை, தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. புகைப்படம் ஒட்டி தர வேண்டும்; பழைய வாக்காளர் பட்டியலை இணைய தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும் என்று சொல்வது எல்லாம், பெரும்பான்மை வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணியை அவசரமாக செய்யக்கூடாது; அவகாசம் கொடுக்க வேண்டும். நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்., மாதம் தேர்தலை வைத்து கொண்டு, இப்போது இதை செய்யத் துவங்குவது சரியானது அல்ல; முறையானது அல்ல. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே, அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் கூட்டம், நவம்பர், 2ல், சென்னை தி.நகர் ஹோட்டலில் நடத்தப்பட உள்ளது. அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளுடன் நாளை
தேர்தல் கமிஷன் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக, அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் இந்த ஆலோசனை கூட்டம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், நாளை மாலை, 4:00 மணிக்கு தலைமை செயலகத்தில் நடக்கவுள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட, 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு இருவர் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பான கேள்விகளுக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.