உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி தி.மு.க., - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி தி.மு.க., - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை:அம்பேத்கரை அவமதித்ததாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் நேற்று, மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தின.அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று முன்தினம் லோக்சபாவில் நடந்தது. அப்போது, அமித் ஷா பேசுகையில், 'அம்பேத்கர் அம்பேத்கர் என, முழக்கமிடுவது, இப்போது பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்றார்.அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்; மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.இந்நிலையில், அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் பேச்சை கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட, 75 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்இந்த விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தலைமை வகித்து பேசியதாவது:மத்திய உள்துறை அமைச்சர் பதவியை, அமித் ஷா உடனே ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்படி நீக்கவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி வீதியில் வந்து போராடும். அம்பேத்கர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் எவரையும் விட்டு வைக்க மாட்டோம்.இவ்வாறு அவர் பேசினார்.வி.சி., ரயில் மறியல்:அம்பேத்கரை அவமதித்து பேசினார் என்று சொல்லி, அமித் ஷா பதவி விலகக்கோரி, நேற்று விக்கிரவாண்டி ஒன்றிய வி.சி., சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் வெற்றிவேந்தன் தலைமையில் நேற்று மதியம், 12:45 மணிக்கு தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வந்த பயணியர் ரயில் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 30 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட வி.சி., சார்பில் சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் புதுச்சேரியில் இருந்து காலை, 8:37 மணிக்கு விழுப்புரம் நோக்கி வந்த பயணியர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் பொன்னிவளவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில், மேற்கு மாவட்ட செயலர் தமிழன் தலைமையில், கோயம்புத்துாரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ஜனசதாப்தி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய உள்துறை அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பப்பட்டன. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை பாபநாசம் போலீசார் கைது செய்தனர்.

அம்பேத்கரை அவமதித்த கூட்டணியில் திருமா!

கடந்த, 2012ல் மத்தியில், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி ஆட்சியின்போது, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடப்புத்தகங்களில், அம்பேத்கரை மோசமாக சித்தரிக்கும், 'கார்டூன்' இடம்பெற்றிருந்தது. இதை, வி.சி., தலைவர் திருமாவளவன் கண்டித்தார். இன்று, அம்பேத்கரை அவமதித்த அதே கட்சிகளின் கூட்டணியில், திருமாவளவன் இருக்கிறார். இதற்கு, அவர் தான் பதிலளிக்க வேண்டும். காங்கிரஸ், அம்பேத்கரை அவமதிக்கிறது. -- அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை