வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரொம்ப முத்திப் போச்சு...
சென்னை: ''தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், தி.மு.க.,வும், காங்கிரசும் ஒரே அணியில், அதே சிந்தனையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்,'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சொக்கரின் பேரனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ராஜா சொக்கரின் மகனுமான சிவராஜா திருமணம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., வும், காங்கிரசும் ஒரு காலத்தில் வெவ்வேறு பாதைகளில் பயணித்தன; இருந்த போதும், இன்றைக்கு நாட்டின் நன்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒரே அணியில் அதே சிந்தனையுடன் பயணித்து கொண்டிருக்கிறோம். அரசியல் நட்பு காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரான சகோதரர் ராகுல், தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறார். அதை, என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பேசுகிறபோது, அழைக்கிற போது, யாரையும் நான் சகோதரர் என சொன்னது கிடையாது. ஆனால், ராகுலை மட்டும் நான் அழைக்கிற போது, சகோதரர் என சொல்வதுண்டு. இதற்கு காரணம் என்னவென்றால், அவர் என்னை அண்ணன் என அழைப்பார். அந்த அளவுக்கு அரசியல் நட்பு மட்டுமல்ல; கொள்கை உறவாகவும் வலுப்பெற்று, இந்தியாவின் குரலாக இன்றைக்கு எதிரொலித்து கொண்டிருக்கிறது. இந்த உணர்வை தான் நாங்கள் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். தனி மனிதர்களுடைய நலனை விட, நாட்டின் நலன் தான் முக்கியம் என்ற உணர்வோடு, அந்த நட்புணர்வு இன்றைக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலம் இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கிற புரிதலும், கொள்கை உறவும், நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றும் ; அது உறுதி. இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பேச்சை அடுத்து தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன் உள்ளிட்ட மற்ற கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருமண விழாவில் தி.மு.க.,வும், காங்கிரசும் ஒரே அணியில், ஒரே சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியது, அக்க ட்சியில் பேசுபொருளாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய கட்சி. தேசியவாதத்தை கொள்கையாக ஏற்ற கட்சி. அனைத்து மதங்களின் கடவுளையும் ஏற்றுக் கொள்ளும் சிந்தனையுள்ள கட்சி. ஆனால், தி.மு.க., திராவிட கொள்கை, கடவுள் மறுப்பு கொள்கை உடைய கட்சி. இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறானவை. இந்நிலையில், ஒரே சிந்தனையில் காங்கிரசும், தி.மு.க.,வும் பயணிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது, இரு கட்சி தொண்டர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு கட்சியினரும் வெவ்வேறு சிந்தனை; சித்தாந்தம் உடையவர்கள். முதல்வரின் கருத்துபடி, காங்கிரசார் சிந்தனை மாறி, தி.மு.க.,வினர் சிந்தனையோடு பயணிக்கின்றனரா அல்லது தி.மு.க.,வினர் சிந்தனை மாறி, காங்கிரசாரின் சிந்தனையோடு பயணிக்கின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், 'இரு கட்சிகளின் கொள்கைகளும் வெவ்வேறா னவை. ஒரே சிந்தனையில் பயணிக்கிறோம் என்ற முதல்வர் கருத்தை, ஒரே கூட்டணியை குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம்' என்றனர்.
ரொம்ப முத்திப் போச்சு...