வெற்று அறிக்கையான தி.மு.க., தேர்தல் அறிக்கை; சத்துணவு ஊழியர்கள் குமுறல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை:தி.மு.க., தேர்தல் அறிக்கை, கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில், ‛வெற்று அறிக்கை'யாக மாறிவிட்டதாக, சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேர்தலின்போது தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை, எண் 313ன் படி சத்துணவு ஊழியர்களுக்கு, காலமுறை சம்பளம், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், சமையலர் என, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். குறைந்தபட்ச பென்ஷனாக 7,850 ரூபாய் வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகள் தரப்பட்டன. ஆட்சி அமைந்தபின், இவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த அரசின் இறுதி ஆண்டு சட்டசபை மானிய கோரிக்கையில், அனைத்து அறிவிப்புகளும் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், சத்துணவு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலர் பாண்டி கூறியதாவது: ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் மாதம் 2,000 பென்ஷன் தொகையில், வாழ்வாதாரம் நடத்துகின்றனர். நாள் ஒன்றுக்கு 66 ரூபாய் 6 பைசாவை வைத்து எப்படி வாழ்வாதாரத்தை நடத்த முடியும். சத்துணவு மையங்களில், 65,000 காலிப்பணியிடம் இருக்கிறது. ஆனால், பெயரளவிற்கு, மாதம் 3,000 ரூபாய் சம்பளத்தில், 8,000 உதவியாளர்கள் பணியிடம் நிரப்பபடும் என, அறிவித்துள்ளனர். அமைப்பாளர் காலிபணியிடம் மட்டுமே 20,000 வரை உள்ளது. இந்த அரசின் கடைசி சட்டசபை கூட்ட, மானிய கோரிக்கையில் அறிவிப்பு வரும் என, எதிர்பார்த்து தான், ஏப்., 9ல் நடத்துவதாக இருந்த, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால், எங்களின் 40 ஆண்டுகால கனவை சிதைக்கும் விதமாக, தி.மு.க., தேர்தல் அறிக்கை ‛வெற்று அறிக்கை'யாகி போய்விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.