தமிழகத்துக்கு பொருளாதார பேரழிவு தி.மு.க., அரசை வீட்டுக்கு அணுப்பணும்
சென்னை:கடந்த ஆறு மாதங்களில், தி.மு.க., அரசு 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், தமிழக அரசு 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், மேலும் 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் செலவுகள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால், அதை சமாளிக்கும் அளவுக்கு, மக்களை பாதிக்காத வகையில், அரசின் வருவாய் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், தொலைநோக்கு பார்வையில்லாத தி.மு.க., அரசுக்கு, மது விலையை உயர்த்துவது, விற்பனையை அதிகரிப்பது ஆகியவற்றை தவிர, வேறு எதுவும் தெரியவில்லை. கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 700 கோடியே 81 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதுவரை வாங்கிய கடனுக்காக, தினமும் 175 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டியுள்ளது. பொருளாதாரப் பேரழிவிலிருந்து, தமிழகத்தை மீட்க, தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் ஒரே வழி. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் அதை செய்து முடிப்பர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.