தி.மு.க., ஆட்சியும் அதிகாரமும் இன்னும் ஆறு மாதங்கள் தான்
திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சக்தி நகர் பனந்தோப்பில், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேடையில், பனையேறிகள் இயக்க நிர்வாகிகளுடன் சேர்ந்து, சீமானும், நல்லசாமியும் பனை ஓலையில் கள் அருந்தினர். மாநாட்டில், சீமான் பேசியதாவது: கள் என்பது உணவுப்பொருள்; மருந்தாகவும் அமையக்கூடியது. கள் இறக்க அனுமதிப்பதால், வேலைவாய்ப்பு பெருகுவதோடு, அரசுக்கு வருமானமும் கிடைக்கும். கள்ளை தடுப்பது அவர்கள் பிரச்னை அல்ல. மக்களிடம், சீமான் வளர்வதை தடுக்க வேண்டும் என்பது தான். தி.மு.க., ஆட்சியும், அதிகாரமும், 500 ஆண்டுகளுக்கா இருக்கப்போகிறது? இன்னும் ஆறு மாதங்கள் தான். மாட்டுக்கு அறிவு இருப்பதால் அதனுடன் பேசுகிறேன்; உங்களைப் போன்ற அறிவற்ற பதர்களுடனா பேசுகிறேன்? உயிருள்ள சின்னத்தை, தர முடியாது, எனக் கூறி விட்டு, விவசாயி சின்னத்தை தேர்தல் கமிஷனில் கொடுத்தனர். அப்படியானால், விவசாயி உயிருடன் இல்லை என்று அர்த்தமா? என்னை எதிர்த்து போராடும் அளவுக்கு, எல்லா கட்சிகளும் வந்து விட்டன. ஆனால், பயத்தை, அவர்கள் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். என்னை பார்த்து, அவர்களின் ஈரக்குலை உள்ளே நடுங்கும் போது, மேலே கோட் சூட் போட்டுக் கொள்வார்கள். நான், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தவுடன், 'சீமான் பெட்டி வாங்கி விட்டார்' என்றனர்; 'சீமான் பெட்டி கொடுத்தார்' என்று பேச வேண்டியது தானே? கடுமையான சட்டம் இயற்றினால் தான் ஆணவ படுகொலை செய்பவர்கள் பயப்படுவார்கள். வரும் சட்டசபை தேர்தலில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதியில், தேன்மொழி என்ற இளம் பெண் போட்டியிடுவார். இவ்வாறு, அவர் பேசினார்.