இரட்டை இலக்க தொகுதி, ராஜ்யசபா எம்.பி., சீட் தி.மு.க., கூட்டணியில் சேர தே.மு.தி.க., பேச்சு
தி.மு.க., கூட்டணியில் சேர காய் நகர்த்தி வரும் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, சமீப நாட்களாக தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகிறார். சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு, மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசிய தகவலும் வெளியாகி உள்ளது.கடந்த 2005ம் ஆண்டில் துவக்கப்பட்ட தே.மு.தி.க., தற்போது வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், அக்கட்சிக்கு எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் இல்லை. அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட போதிலும், தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது. அதோடு, அக்கட்சியிடம் பெரிதும் எதிர்பார்த்த ராஜ்யசபா எம்.பி., பதவியும் கிடைக்காது என தெரியவந்துள்ளதால், தன் மகனின் எதிர்காலம் கருதி, தி.மு.க., பக்கம் திரும்பி விட்டார் பிரேமலதா. லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று, அரசின் முடிவுக்கு தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்தது.தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்பதாக, பிரேமலதா தெரிவித்தார். 'பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணத் தொகை அறிவித்திருக்கும் தி.மு.க., அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.பிரேமலதாவின் மனமாற்றத்திற்கு தி.மு.க.,வில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சுதான் காரணம் என, சொல்லப்படுகிறது.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:ராஜ்யசபா தேர்தலில், தே.மு.தி.க.,வுக்கு வாய்ப்பு தர முடியாது என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியது, பிரேமலதாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த தேர்தல்களில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்திருந்தால், தே.மு.தி.க.,வுக்கு சட்டசபையிலும், லோக்சபாவிலும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.,விடம் போய் அனைத்தும் இழந்து விட்டோம் என எண்ணுகிறார். இப்போது, பிரேமலதாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, இந்த முறை ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவதற்கு பதிலாக, தே.மு.தி.க.,வுக்கு வழங்குவதன் வாயிலாக, நாயுடு சமுதாயத்தினரின் ஓட்டுக்களை தக்க வைக்கும் வாய்ப்பு தி.மு.க.,வுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்கத்தில், 'சீட்' கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. மூத்த அமைச்சர் ஒருவர் நடத்திய பேச்சு, அதற்கு கை கொடுத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -