உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்கு மக்களிடம் ஆதார் கோரவில்லை: தி.மு.க., தரப்பு வாதம்

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்கு மக்களிடம் ஆதார் கோரவில்லை: தி.மு.க., தரப்பு வாதம்

மதுரை: 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்துக்கு, தனி நபரிடம் இருந்து ஆதார் ஓ.டி.பி., பெறும் நடைமுறைக்கு தடை விதிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், அதிகரை ராஜ்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை, செயலி வாயிலாக தி.மு.க., நடத்துகிறது. இதற்காக, பொதுமக்களிடம் ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்கின்றனர். விபரங்களை பெற்று, செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை நிரப்ப, தி.மு.க.,வில் இணைய விரும்பும் நபரின் செல்போனுக்கு ஆதார் இணைப்புக்கான ஓ.டி.பி., வருகிறது. அதை, உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபடும் தி.மு.க., நபரிடம் தெரிவித்ததும், அவர் அதை செயலியில் உள்ளிடு செய்கிறார். உடனே, தி.மு.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. ஆதார் எண் உள்ளிட்ட விபரங்கள், தனிப்பட்ட நபருக்கானவை. அரசு சேவைகள் தவிர்த்த, தனி நபர்கள் அதைக் கேட்டுப் பெறுவது தவறு. இது, புள்ளி விபரத் திருட்டின் கீழ் தவறாக கருதப்படுபவை. அதனால், அந்த விபரங்களை சேகரிக்க தடை விதிக்க வேண்டும். குறிப்பாக, ஓ.டி.பி., பெறும் முறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. நேற்று முன்தினம், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் ஓ.டி.பி., சரிபார்ப்பு அனுப்புவதை தடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டனர். இதையடுத்து, தி.மு.க., சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வழக்கறிஞர் பாசில் ஆகியோர், கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டதாவது: தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கைக்காக, ஆதார் உள்ளிட்ட தனி நபர் விபரங்களை, எங்கும் யாரிடமும் கோரவில்லை. வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. உறுப்பினர் சேர்க்கைக்கு சம்மதம் பெறுவதற்காகவே, ஓ.டி.பி.,பெறப்பட்டது. தற்போது உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அனைத்து பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. தடையை நீக்கக் கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நாளை மறுநாள் இந்த வழக்கு விசாரிக்கப்படும்' என்றனர்.இதனிடையே திமுக வெளியிட்ட அறிக்கையில், ஓரணியில் தமிழகத்துக்கு ஆதார் எண் கேட்கவில்லை. ஒரு மொபைல்எண்ணில் குடும்பத்தினர் 4 பேரை சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி