உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., - பா.ஜ., அணியை வீழ்த்த சூர்யாவை களமிறக்க தி.மு.க., வியூகம்

அ.தி.மு.க., - பா.ஜ., அணியை வீழ்த்த சூர்யாவை களமிறக்க தி.மு.க., வியூகம்

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில், கோவையில் நடிகர் சூர்யாவை களமிறக்க, தி.மு.க., முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில் வென்று, தி.மு.க., ஆட்சி அமைத்தது. அதில், 1967, 1971 ஆகிய இரு தேர்தல்களில் மட்டுமே தொடர் வெற்றியை பெற்றது. அதன் பின், ஆட்சியை தக்க வைத்ததாக வரலாறு இல்லை. எதிர்க்கட்சிகள் இதை பெரும் விமர்சனமாக வைத்து வருகின்றன. இந்த விமர்சனத்தை முறியடிக்க, வரும் 2026 சட்டசபை தேர்தலில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். 'கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல் தொடர் வெற்றியை பெற்றாலும், 2026 சட்டசபை தேர்தல் வெற்றியே, தனக்கும், கட்சிக்கும் வரலாற்றில் நிலையான இடத்தை பெற்று தரும்' என நினைக்கிறார். ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பிளவுபட்டு, பலமிழந்து இருப்பதும், வலுவான கூட்டணி அமையாததும், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது. ஆனால், கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி வலுவாக இருப்பதையும், விஜயின் த.வெ.க.,வின் ஓட்டு 10 சதவீதத்தை தாண்டும் என, பல கருத்து கணிப்புகள் தெரிவிப்பதையும், எதிர்கொள்ள ஸ்டாலினும் தயாராகி வருகிறார். ஆனால், குறைந்தது 200 இடங்களில் வெல்ல இலக்கு வைத்துள்ள ஸ்டாலின், அதற்கு தடையாக வடக்கு, மேற்கு மாவட்டங்கள் இருக்கும் என நினைக்கிறார். பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதலால், வடக்கு மாவட்டங்களில் வென்று விடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஏற்பட்டுள்ளதால், கொங்கு மண்டலம், தி.மு.க., காலை வாரிவிட்டு விடக்கூடாது என்ற கவலையும் இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் பலன் கொடுக்கும் என்பதற்காகவே, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை, தி.மு.க.,வில் சேர்த்தனர். அதை தொடர்ந்து, வரும் சட்டசபை தேர்தலில், கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில், நடிகர் சூர்யாவை களமிறக்க, தி.மு.க., முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால், நடிகர் சிவகுமார் குடும்பத்தில் ஒருவரை களமிறக்கும் திட்டத்தில் தி.மு.க., இருப்பதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சூர்யா குடும்பத்தினர் நடத்தும், 'அகரம் அறக்கட்டளை' விழாவில், அதனால் பயன் பெற்றவர்கள் பேசியது, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என, நான்கு பிரபல நடிகர்கள் உள்ள குடும்பம் அது. எனவே, இவர்களில் ஒருவர் கோவையில் போட்டியிட்டால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை வீழ்த்தலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். நடிகர் விஜயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் சூர்யா உதவுவார் என தி.மு.க., நினைக்கிறது. கொங்கு மண்டலத்தில் பிரதானமாக இருக்கும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் என்பதால், ஜாதி பின்புலமும், தி.மு.க.,வுக்கு கைகொடுக்கும் என கணக்கு போட்டு, இவ்விஷயத்தில் தி.மு.க., காய் நகர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை