உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.என்.ஏ., மாதிரிகளை சேமிப்பதற்கான சட்டம் தேவை : தமிழக டி.ஜி.பி., வலியுறுத்தல்

டி.என்.ஏ., மாதிரிகளை சேமிப்பதற்கான சட்டம் தேவை : தமிழக டி.ஜி.பி., வலியுறுத்தல்

சென்னை : ''குற்ற வழக்குகளை எளிதில் கண்டறிய உதவும், டி.என்.ஏ., மாதிரிகளை சேமிப்பதற்கான சட்டம் இந்தியாவில் இல்லை. இதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும்,'' என்று தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் வலியுறுத்தியுள்ளார். தமிழக போலீசில் உள்ள போலீசாரின் பணித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தவும், பணித்திறனை மேம்படுத்தவும், 'மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள்', சி.பி.சி.ஐ.டி., சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு போட்டிகள், கடந்த 22ம் தேதி முதல், நேற்று வரை, வண்டலூரில் உள்ள தமிழக போலீஸ் அகடமி வளாகத்தில் நடந்தது.

இப்போட்டிகளில், 108 பெண்கள் உட்பட 593 பேர் மற்றும் 19 அணிகளைச் சேர்ந்த, 55 மோப்பநாய்கள் பங்குபெற்றன. நேற்று நடந்த விழாவில், தமிழக டி.ஜி.பி., ராமானுஜம், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். மேலும், மும்பையில் நடந்த, 2007ம் ஆண்டுக்கான 51வது அகில இந்திய காவல்பணித் திறனாய்வு போட்டியில், பதக்கம் வென்றவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தாண்டிற்கான மாநில காவல் பணித்திறனாய்வு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, சென்னை போலீஸ் தட்டிச் சென்றது. சென்னை போலீசின் பெண் எஸ்.ஐ., மஞ்சுளா அதிகப்படியாக ஐந்து பதக்கங்கள் பெற்றார். பரிசுகளை வழங்கி டி.ஜி.பி., ராமானுஜம் பேசியதாவது:

அனைத்திந்திய அளவில் நடக்கும் பணித்திறன் போட்டிக்கு தயார் செய்வது மட்டுமல்லாமல், போலீசார் தங்கள் பணியில் அறிவியல் திறன்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறதே தவிர, சம்பிரதாயத்திற்காக அல்ல. குற்றச்சம்பவங்கள் கண்டுபிடிக்கப்படும் போது, எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று அதிகாரிகளிடம் நான் கேட்பது வழக்கம். ராமநாதபுரத்தில் நடந்த கொலை சம்பவத்தில், அந்த இடத்தில் கிடைத்த வாகனத்தின் பின்புற விளக்கு மற்றும் விபத்தில் சிக்கிய வாகனத்தில் கிடைத்த பெயின்ட் படிவம் ஆகியவற்றை கொண்டு, கண்டுபிடித்ததாக கூறினார்கள். இது போன்ற உண்மையான வழக்குகளில், திறமையாக புலனாய்வு செய்தால் பெருமை கிடைக்கும்.

தமிழகத்தில் குற்றவழக்குகள் கண்டுபிடிப்பதில், கைரேகை முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்தியாவில் ஆயிரம் வழக்குகள் கைரேகை மூலம் கண்டுபிடிக்கப்பட்டால், அதில் 350 வழக்குகள் தமிழகத்தில் இருக்கும். இது தவிர டி.என்.ஏ., மாதிரிகள் மூலம் குற்றத்தை கண்டுபிடிக்கும் அறிவியல் வாய்ப்பும் உள்ளது. மிக உயரிய தொழில்நுட்பமான இதை பயன்படுத்தி இந்திய அளவில் 10 வழக்குகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.இங்கிலாந்தில் ஒரு மாதத்தில் நடந்த 26 கொலை, 52 கற்பழிப்பு மற்றும் 3,000 இதர வழக்குகளை கண்டுபிடிக்க டி.என்.ஏ., மாதிரி பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில், ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 35 லட்சம் பேரின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், டி.என்.ஏ., மாதிரிகளை எடுத்து சேமிப்பதற்கான சட்டம் இல்லை; ஏற்கனவே உள்ள பழைய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை. டி.என்.ஏ., மாதிரிகள் மூலம் அதிகளவில் குற்றங்களை கண்டுபிடிக்கலாம். சட்டத்தில் இதற்கான வழிமுறைகளை கொண்டு வரவேண்டும்.இவ்வாறு டி.ஜி.பி., ராமானுஜம் பேசினார்.

விழாவில், டி.ஜி.பி., லத்திகா சரண், சென்னை மாநகர கமிஷனர் திரிபாதி, கூடுதல் டி.ஜி. பி.,க்கள் ராஜேந்திரன், அனூப்ஜெய்ஸ்வால், ஜார்ஜ் மற்றும் ஐ.ஜி.,க்கள் சைலேந்திரபாபு, மஞ்சுநாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ