உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூல் லிப் போதை பொருட்களில் அபாய எச்சரிக்கை சின்னம் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

கூல் லிப் போதை பொருட்களில் அபாய எச்சரிக்கை சின்னம் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை:'கூல் லிப்' பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை வாசகம், அபாய மண்டை ஓடு சின்னம் இடம்பெறுவது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டப்படி பின்பற்றப்படுகிறதா என, ஹரியானா நிறுவனம் தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தென்காசி மாவட்டம் காளத்திமடத்தைச் சேர்ந்தவர், ஆனஸ்ட்ராஜா. தடை செய்யப்பட்ட கூல் லிப் புகையிலை போதைப் பொருளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்ததாக, கடையம் போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான ஆனஸ்ட்ராஜா, ஜாமின் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி: அதிக கூல் லிப் தயாரிப்புகளை தமிழக அரசு பறிமுதல் செய்து வருகிறது.கூல் லிப்பை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் வகுப்பில் அலட்சியமாக நடந்து கொள்வதுடன், மயங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் சம்பவங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது, பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கூல் லிப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்; தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.பிற மாநிலங்களில் தயாரித்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை, தமிழக பள்ளிக் கல்வித்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, கூல் லிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹரியானா, கர்நாடகாவை சேர்ந்த மூன்று நிறுவனங்களை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக இணைத்து, பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புகிறது.மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.ஏற்கனவே விசாரணையின் போது மத்திய, மாநில அரசுகள் தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி: கூல் லிப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த எச்சரிக்கை வாசகம், அபாய மண்டை ஓடு சின்னம் அத்தயாரிப்பில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டப்படி இடம்பெற வேண்டும்.இதை கூல் லிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹரியானா நிறுவனம் பின்பற்றுகிறதா என விபரம் பெற்று, அதன் தரப்பு வழக்கறிஞர் இன்று தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை