உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அரசு தரும் 1,000 ரூபாய் வேண்டுமா? பெண்கள் போராடினால் விடிவு

தமிழக அரசு தரும் 1,000 ரூபாய் வேண்டுமா? பெண்கள் போராடினால் விடிவு

சேலம்: தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் 'சக்தி சேனா' மகளிர் அமைப்பின், சேலம் மாவட்ட மாநாடு, சேலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பேர் மது அருந்துகின்றனர். சமீபத்தில், கள்ளச்சாராயம் குடித்து, 70க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சாராயத்தால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கணவனை இழப்பது, பொருளாதார கஷ்டம், குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம், சமுதாயத்தில் பாதுகாப்பின்மை என, அனைத்துக்கும் சாராயம் காரணமாக உள்ளது.பெண்களுக்கு தமிழக அரசு ஆயிரம் ரூபாய் தருகிறது. அதை வைத்து எதுவும் செய்யமுடியாது. மது அருந்துபவர்கள், டாஸ்மாக் மதுக்கடைக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர். அந்த 10 ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுத்தால் நகை வாங்கி சேமிப்பதுடன், குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை வாங்கி தரலாம். இந்த ஆயிரம் ரூபாய் வேண்டுமா? மாதம் 10 ஆயிரம் சேமிக்க வேண்டுமா? டாஸ்மாக்கால் பெண்களின் உரிமை, வாழ்வாதாரம் கெட்டுப்போகிறது. பெண்கள் சாலையில் இறங்கி போராடினால்தான் தடுக்கமுடியும். போராட்ட குணமாக உண்மையான சக்தியின் சொரூபமாக பெண்கள் மாறவேண்டும். மிக விரைவில் தமிழகம் தழுவிய பிரமாண்டமான சக்திசேனா மாநாடு நடத்த வேண்டும். சக்திகள் ஒன்று சேர்ந்தால் அதன் பலம் என்ன என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

10,000 கோவில்கள் எங்கே?

நிருபர்களிடம் ஆர்ஆர்.கோபால்ஜி கூறியதாவது: குடிபழக்கத்துக்கு அடிமையான ஆண்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாற்று மதத்தினர், மதமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்து கோவில்களை ஒழுங்காக நிர்வாகம் செய்யாமல், கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கோவில்கள், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடவேண்டும்.40 ஆயிரம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 10 ஆயிரம் கோவில்களை காணவில்லை. அந்த கோவில்களுக்கான ஆவணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !