உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாரியத்தை கூறு போடுவதா? அரசுக்கு பழனிசாமி கண்டனம்!

மின் வாரியத்தை கூறு போடுவதா? அரசுக்கு பழனிசாமி கண்டனம்!

சென்னை:'மின் வாரியத்தை பல கூறுகளாக துண்டாடி, படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மத்தியில் பா.ஜ., - தி.மு.க., கூட்டணி, 2003ம் ஆண்டு ஆட்சியில் இருந்த போது தான், மின்சார சட்டம் கொண்டு வரப்பட்டது. 2006 - 11ல், அப்போதைய தி.மு.க., அரசு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த மின்சார வாரியத்தை, 2010 அக்., 19ல் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம், மின்சார வாரிய நிறுவனம் என, மூன்று நிறுவனங்களாக பிரித்தது.தற்போது மீண்டும், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை, மின் உற்பத்திக் கழகம், மின் பகிர்மானக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம் என, மூன்று நிறுவனங்களாக பிரித்துள்ளது.இதன்படி சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பது, காற்றாலை மின் உற்பத்தி செய்வது போன்றவற்றை, தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில், தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக, பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. மின் வாரியம் தனியார் மயமாக்கப்பட்டால், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.தன்னாட்சி அதிகாரம் உடைய, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் என்ற மின் வாரியத்தின் அந்தஸ்தை, தி.மு.க., அரசு சிறுக சிறுக பறித்து, படிப்படியாக தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.எனவே, மறு சீரமைப்பு என்கிற போர்வையில், மின் வாரியத்தை பல கூறுகளாக துண்டாடி, படிப்படியாக தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ