ஆனைகட்டி ரிசார்ட்களுக்கு உரிமம் உள்ளதா? ஆய்வு செய்ய குழு அமைத்தது ஐகோர்ட்
சென்னை: கோவை ஆனைகட்டியில் உள்ள, 'ரிசார்ட்'கள் உரிமம் பெற்று இயங்கு கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'யானைகள் வழித்தடமான ஆனைகட்டியில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை மூட வேண்டும்; கோவை - ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில், இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'நீலகிரி மாவட்டம், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த ரிசார்ட்கள் மூடப்பட்டதை அடுத்து, ஆனைகட்டி பகுதியில் சட்ட விரோதமாக ரிசார்ட்கள் துவங்கப்படுகின்றன' என்று கூறப்பட்டது. அப்போது, வனத்துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, ''ஆனைகட்டியில் வனத்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், எந்த ரிசார்ட்களும் இல்லை. ''மனுதாரர் குறிப்பிடும் ரிசார்ட்கள், வெளியே தான் உள்ளன என்பதால், வனத்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது. எல்லா துறைகளிடம் ஆலோசித்து விட்டு தான் அறிக்கை தாக்கல் செய்ய முடியும்,''என்றார். அதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் ரிசார்ட்டுகள் உரிமம் பெற்று இயங்குகின்றனவா என்பதை ஆய்வு செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டனர். மேலும், 'இந்த குழு சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோவை - ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் எற்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை வரும், 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.