திருப்பரங்குன்றத்தை பொது பிரச்னை ஆக்கிவிடாதீர்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை:சென்னை நுங்கம்பாக்கம், அறநிலையத்துறை தலைமையகத்தில், அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் மேம்பாட்டு பணிகள், மகா சிவராத்திரி பெருவிழா, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களின் திருப்பணி குறித்த சீராய்வு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து, அமைச்சர் அளித்த பேட்டி:அறுபடை வீடு முருகன் கோவிலில், 801 கோடி ரூபாயில் 275 பணிகள்; மற்ற முருகன் கோவில்களில், 284 கோடி ரூபாயில், 609 பணிகள் நடக்கின்றன. திருத்தணி, சிறுவாபுரி கோவிலில், 110 கோடி ரூபாயில் மாற்றுப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருதமலையில் 160 அடி உயர கருங்கல் முருகன் சிலையை நிறுவ உள்ளோம். திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை குறித்து, 1930ம் ஆண்டில் லண்டன் பிரிவியூ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதை தொடர்ந்து, பல்வேறு காலகட்டங்களில், ஐந்து வழக்குகளில், உயர் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. தற்போது கூட, இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, இரண்டு பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பிப்., 4ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. அவரவர் விரும்புகின்ற மத சடங்குகளை முன்னோர் எப்படி பின்பற்றி வந்தனரோ, அதே நிலை தொடர்ந்தால், அனைவருக்கும் அமைதியான ஒரு சூழல் அமையும்.எந்த மதமாக இருந்தாலும், அவர்கள் வழிபாட்டிற்கு முழு பாதுகாப்பு, முழு அமைதி இருக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தை பொது பிரச்னையாக ஆக்கி விடாதீர், ஜாதி, மதம், இனங்களுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் மனிதர்கள் என்ற நிலையிலே, இந்த பிரச்னையை அணுக வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், இது குறித்து மேலும் விபரமாக சொல்வது சரியானதாக இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.