போதை பொருள் வழக்கு; ரூ.21 கோடி சொத்து முடக்கம்
சென்னை; 'தமிழகத்தில், நான்கு ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன' என, இ.பி.சி.ஐ.டி., எனப்படும் அமலாக்கப் பணியகத்தின் இயக்குநரக கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியம் என்ற நிலையை தக்க வைத்து வருகிறோம். நம் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. இதை முறியடித்து வருகிறோம். போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கையில், கடந்த, 2021 - 2025 வரை, 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள், 2,412 பிற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த, ஜூலையில் கல்லுாரி மாணவர்களுக்கு விற்க இருந்த, 5,250 கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டப்பூர்வமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில், 61,000 கிலோ எடையிலான போதை பொருட்கள் அழிக்கப்பட்டன. கடந்த, 2022 - 2025ம் ஆண்டு வரை, போதை பொருள் தொடர்பான வழக்கில், 21 கோடி ரூபாய் மதிப்புள்ள, 45 வகையான சொத்துக்களும், 10,741 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்து வருகிறது. 2023ம் ஆண்டில், போதை மாத்திரைகளின் பறிமுதல் எண்ணிக்கை, 39,910 ஆக இருந்தது. இது, தற்போது, 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆன்லைன் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் போதை மாத்திரைகள் விற்பனை நடக்கிறது. இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.