உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மண்டபம் பகுதியிலிருந்து இலங்கை செல்லும் போதைப்பொருள்: அதிகாரிகள் விசாரணை

மண்டபம் பகுதியிலிருந்து இலங்கை செல்லும் போதைப்பொருள்: அதிகாரிகள் விசாரணை

சென்னை:போதைப்பொருள் கடத்தலுக்கான திட்டம் வகுக்கப்படும் இடமாக மாறி வருவதால், மண்டபம் முகாம் பகுதியில் என்.சி.பி., அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.மணிப்பூரில் இருந்து கடத்தி வரப்படும், மெத்ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள், சென்னை செங்குன்றம் அருகே பதுக்கி வைக்கப்படுகின்றன. அங்கிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. இதில், கடத்தலுக்கு திட்டம் வகுக்கும் முக்கிய இடமாக, மண்டபம் அகதிகள் முகாம் செயல்பட்டு வருவதாக, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூறியதாவது:கடந்த ஜூலையில், மணிப்பூரில் இருந்து செங்குன்றத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட, 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைனை பறிமுதல் செய்தோம். இந்த போதைப் பொருளை, சென்னை அருகே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பஸ்சில் கடத்திய, சையது இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.அவர், தி.மு.க.,வில், ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு நிர்வாகியாக இருந்தார்.அதற்கு முன் ஜூன் மாதம், மணிப்பூரில் இருந்து மெத் ஆம்பெட்டமைன் கடத்தி வந்த முகமது ரியாசுதீன் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வாயிலாக கிடைத்த, 1.45 கோடி ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர்களை, மண்டபம் முகாமில் இருந்த கிருஷ்ணகுமாரி என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். இருவரிடமும், 1.47 கிலோ மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், சையது இப்ராஹிம், ரியாசுதீன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் தொடர்ச்சியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்துவது தெரியவந்தது.மண்டபம் முகாம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், போதைப் பொருள் கடத்தலுக்கான திட்டம் வகுக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனால், அங்கு விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ