உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14 ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் புரொசிஜர் சிக்கலில் துரைமுருகன் வழக்கு

14 ஆண்டுகளாக தீர்வு இல்லாமல் புரொசிஜர் சிக்கலில் துரைமுருகன் வழக்கு

சென்னை: தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, வேலுார் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, கடந்த 2019ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி காலத்தில் கடந்த 2006 - -11ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக துரைமுருகன் பதவி வகித்தார். இவர், 2007- - 2009ம் ஆண்டு கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

விசாரணை

துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கு, வேலுார் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. பின், இந்த வழக்கை, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, 2019ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. வேலுார் நீதிமன்றத்தில் இருந்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவில், 'வழக்கில் இருந்து என்னை விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம் 2017ம் ஆண்டில் உத்தரவிட்ட நிலையில், 2019ம் ஆண்டு வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டு உள்ளது. 'வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது' என, கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு தமிழக அரசு, வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

இழுத்தடிப்பு

ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் வேலுாருக்கே மாற்றக்கோரி, துரைமுருகன் தாக்கல் செய்த மனுவுக்கு, லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருவதால், கடந்த எட்டு ஆண்டுகளாகியும், 'புரொசிஜர்' சிக்கல் காரணமாக, வழக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ