உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தில்லுமுல்லு பண்ணித்தான் ஜெயிக்கப் பார்ப்பார்கள் இடைத்தேர்தல் குறித்து துரைமுருகன் பரபரப்பு பேட்டி

தில்லுமுல்லு பண்ணித்தான் ஜெயிக்கப் பார்ப்பார்கள் இடைத்தேர்தல் குறித்து துரைமுருகன் பரபரப்பு பேட்டி

காட்பாடி: ‘‘இடைத்தேர்தலில், கவுரவத்திற்காகவாவது தில்லுமுல்லு பண்ணிதான் ஜெயிக்கப் பார்ப்பார்கள்,’’ என, த.வெ.க., மீது துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். வேலுார் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அளித்த பேட்டி: நான் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். எனவே, நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளிலோ, தீர்ப்புகளிலோ நான் குறுக்கிடுவதில்லை. தீர்ப்புக்கு தலைவணங்க கூடியவன். நான் போட்ட ஒரு மனுவை நீதிபதிகள் வழக்கிற்கு உகந்தது என, ஏற்றுக்கொண்டார்கள். நியாயத்தின் அடிப்படையில் யார் போட்ட மனுவாக இருந்தாலும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். போட்ட மனுக்களிலே நியாயம் இருக்கிறதா என, பார்ப்பார்களே தவிர, மனு போட்டவர் துரைமுருகனா, வேல்முருகனா என, பார்க்க மாட்டார்கள். நான் போட்ட மனுவில் ஆதாரம் இருக்கிறது என நீதிபதிகள் ஏற்றுக்கொண்டதற்காக என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒன்றும் இந்தியா கூட்டணியில் இல்லை. எனவே, டெல்லி பேரணி குறித்து அவர்களிடம் போய்க் கேளுங்கள். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, மும்பையிலும், ஜந்தர் மந்தரிலும் இளைஞர்கள் போராடினார்கள். அவர்களை தடியடிக்கு உட்படுத்தி கைது செய்துள்ளதாக கூறுகிறீர்கள். பொதுவாகவே போராட்டம் என்றால் போலீஸ் அடக்கும். அதன்பின், போராட்டக்காரர்கள் திமிறி நிற்பார்கள். போலீஸ்காரர்களுடைய கடைசி ஆயுதம் தடியடி நடத்துவது, கையில் அகப்பட்டவர்களை எல்லாம் கொண்டுபோய் சிறையிலே போடுவது. இதுதான் வழக்கம். ஆக, அதில் ஒன்றும் புதுமை இல்லை. நாங்கள் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியே வந்துட்டோம். அதைப் பற்றி நாங்கள் எந்தவிதமான குறை சொல்லவும் தயாராக இல்லை. தமிழகத்தில், நான்கு மாத ஆட்சி நிலவரம் குறித்து கேட்கிறீர்கள். பார்வையில் இருக்கிறதே தவிர, எந்தப் பலனும் இல்லை. அரசு விழாவில் காங்., – எம்.பி., அவமதிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள். இதெல்லாம் எனக்குத் தெரியாத கேள்வி. ஊரான் வீட்டை பற்றி எனக்கு அக்கறையே இல்லை. இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா? என கேட்கிறீர்கள். எப்படி நடத்துவார்கள், ரூலிங் பார்ட்டி?, நான் இங்கிருந்து பேசினாலே கன்னியாகுமரியில் ஓட்டு போடுவாங்கன்னு சொன்னார். ஆனால், தெருத்தெருவாக முதல்வர் போய் அலைந்துவிட்டு வந்து இருக்கார். எனவே, அவர் கவுரவத்திற்காகவாவது தேர்தலை கொஞ்சம் தில்லுமுல்லு பண்ணிதான் ஜெயிக்கப் பார்ப்பார்கள். அதில், ஒன்றும் புதுமை இல்லையே. பட்டினப்பாக்கம் தலைமை செயலக விவகாரத்தில், அவர்கள் மாறுவார்கள் என, கருதுகிறேன். மாறாவிட்டால், தமிழகத்திலே ஒரு போராட்டம் வெடிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி