மேலும் செய்திகள்
‛தினமலர்' நாளிதழ் பவள விழா :இன்று இனிய தொடக்கம்
06-Sep-2025
சென்னை: “தன் கஷ்டத்தை விட, நாஞ்சில் நாட்டு மக்களின் கஷ்டத்தை பற்றி எப்போதும் பேசியவர் டி.வி.ராமசுப்பையர்,” என, திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பேசினார். 'மணிமேகலை' பிரசுரம் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின், 117வது ஆண்டு ஜெயந்தி விழாவும், 'தினமலர்' நாளிதழின், 75வது ஆண்டு விழாவும், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தன. இதில், டி.வி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் பேசியதாவது: 'தினமலர்' நாளிதழில், எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்ற கழகமான, எ.ம.மு.க., தலைவரை பற்றி ஒவ்வொரு வாரமும் ஏதாவது எழுதுவர்; அது, தேள் கொட்டுவது போல இருக்கும். இதற்கும், எனக்கும் என்ன சம்பந்தம் என்றால், நான் நடிகராக மட்டுமல்லாமல், எ.ம.மு.க., என்ற கட்சியையும் நடத்தினேன். என்னை பற்றியே அப்படி எழுதினர். புரட்சியாளர் அப்போது நான், நம்மைப் பற்றி ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றனர் என்றால், என்னைப் பற்றிய செய்தியை வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று ரசித்துக் கொள்வேன். டி.வி.ராமசுப்பையரை பற்றி படித்த போது, அவர் ஒரு புரட்சியாளராக முதலில் தோன்றினார். அவரது சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், குடுமி வைத் திருப்பது கட்டாயமாக இருந்த காலத்தில், அவர் முடியை, 'கிராப்' வெட்டிக்கொண்டு, தன் தந்தையின் முன் தைரியமாக போய் நின்றுள்ளார். அதேபோல, அவர் தன் கஷ்டத்தை விட, நாஞ்சில் நாட்டு மக்களின் கஷ்டத்தைப் போக்கவே சிந்தித்துள்ளார். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழ் பேசுவோரை தமிழகத்துடன் இணைப்பதற்காக, விவசாய வருவாயை பத்திரிகை நடத்த செலவிட்டுள்ளார். தன் பத்திரிகையின் வாயிலாக கருத்துக்களை பரப்பியதுடன், போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அந்த எண்ணம் நிறைவேறியதும், நெல்லை மக்களின் குடிநீர், ரயில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கும் பாடுபட்டுள்ளார். அவரின் வழித்தோன்றல்களும், அதே மன உறுதியுடன் பத்திரிகை நடத்துவது தான் பாராட்டத்தக்கது. நான், தற்போது ஞாயிற்றுக்கிழமை, 'தினமலர்' நாளிதழை மறக்காமல் படித்து விடுவேன். அதனுடன் இணைப்பிதழாக வரும், 'வாரமலர்' எப்போதாவது வராவிட்டால் எனக்கு கோபம் வரும். சுறுசுறுப்பு காரணம், அதில் சிறு சிறு தகவல்கள் நிறைய இருக்கும். அதிலுள்ள, 'எட்டு வித்தியாசம்' பகுதியை கூட விட மாட்டேன். காரணம், அது, என் மூளைக்கு வேலை தந்து, சுறுசுறுப்பாக்கும். அதில் ஒன்றை கண்டுபிடிக்க முடியாவிட்டால், வேலைக்காரர்களிடம் கூட கேட்பேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் கருணாநிதி பேசியதாவது; உலகில் கெட்ட விஷயங்கள் நடக்க, 20 சதவீதம் கெட்டவர்களும், நல்லது நடக்க, 20 சதவீதம் நல்லவர்களுமே காரணம். மீதமுள்ளவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் வாழ்க்கையை மட்டுமே பார்ப்பர். கெட்ட விஷயங்களை தடுக்க, நல்லவர்களை உத்வேகப்படுத்தி அதிகரிக்க வேண்டியது அவசியம். போலீஸ் துறையில் கூட, சமூக ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. அந்த பணியையே பத்திரிகைகள் செய்கின்றன. டெட்டனேட்டரை கண்டறிந்த நோபலின் சகோதரர் இறந்த போது, நோபலே இறந்து விட்டதாக ஒரு பத்திரிகையில், 'மரணங்களின் வியாபாரி மறைந்தார்' என்று செய்தி வெளியிடப்பட்டது. அதைப்படித்த நோபல், தான் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருந்தாலும், அணுகுண்டு தயாரிப்பில் டெட்டனேட்டர் பயன்பட்டு விட்டதால், தனக்கு இந்த அவப் பெயர் என்பதை உணர்ந்து, தன் வருவாயின், 94 சதவீதத்தை, சமூக முன்னேற்றத்துக்கு உழைப்பவருக்கு விருது வழங்க ஒதுக்கினார். அது தான் 'நோபல்' பரிசானது. அதுபோன்ற பணியை தான், 'தினமலர்' நாளிதழ் செய்கிறது. நான், 'உரத்த சிந்தனை' பகுதிக்கு ஒரு கட்டுரை எழுதினால், அன்று முழுதும் பலர் என்னை தொடர்பு கொள்வர். அப்படிப்பட்ட வீச்சு அதற்கு உள்ளது. மாணவர்களுக்காக, 'பட்டம்' என்ற இதழையும் 'தினமலர்' நாளிதழ் நடத்துகிறது. அது, இறைவனின் அருளால் மேலும் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்துமதி பேசியதாவது: 'தினமலர்' நாளிதழின் நிர்வாகிகள் அனைவருடனும் பழகி உள்ளேன். அவர்கள், அந்த பத்திரிகையை போலவே இனிமையானவர்கள். நான், 15 வயதிலேயே எழுத்தாளரானேன். எழுத்தாளர்களுக்கு போஸ்டர் ஒட்டிய காலம் அது. தற்போது, அந்த இடத்தை, 'டிவி' சீரியல்கள் பிடித்து விட்டன. தலைமுறை நான் கூட ஒரு வார இதழை நடத்தினேன். அதற்கு பல எதிர்ப்புகளை சந்தித்தேன். ஆனால், தினமும் எதிர்ப்புகளில் பத்திரிகை நடத்தும், 'தின மலரை' பாராட்ட வேண்டும். எதற்கும் சமரசம் இல்லை என்று முடிவான பின், இன்னும் பல விஷயங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த பத்திரிகை, கடலின் அலைபோல தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், 'மணிமேகலை' பிரசுரத்தின் ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன் பேசுகையில், “இறந்தவர்களுக்கும் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்றால், தற்போது உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில், அவர்கள் நல்ல விஷயங்களை செய்திருக்க வேண்டும். ''அவற்றை, தற்கால தலைமுறைக்கு தெரிவிக்க, பிறந்த நாள் கொண்டாட வேண்டும். அந்த வகையில், டி.வி.ஆரின் பிறந்த நாள் தற்போதும் கொண்டாடப்படுகிறது,” என்றார். நிகழ்ச்சியில், மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
06-Sep-2025