மேலும் செய்திகள்
சட்டவிரோத பண பரிமாற்றம் மூவருக்கு ஈ.டி., சம்மன்
26-Sep-2025
சென்னை: 'சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்தியது, நெருங்கிய நண்பர்களுக்கு விற்றது தொடர்பான வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கடந்த ஜூனில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் ஜாமினில் வெளியே வந்து விட்டனர். சில தினங்களுக்கு முன், சூளைமேடு போலீசார், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக, சேலத்தைச் சேர்ந்த, தமிழக பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி உமா ராணியின் மகன் பூரணசந்திரன், 21, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். இதற்கு முன், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக, அ.தி.மு.க., தொழில் நுட்ப பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத், அவரது கூட்டாளிகள் என, 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பின்னணியில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல்படுவதும், இக்கும்பலிடம் இருந்து கோகைன் உள்ளிட்ட போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், நண்பர்களுக்கு விற்ற பட்டியலில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் சில முக்கிய புள்ளிகள் இருப்பது தெரிய வந்தது. போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக, வரும் 28ம் தேதி ஸ்ரீகாந்த், 29ம் தேதி கிருஷ்ணா நேரில் ஆஜராக வேண்டும் என, அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
26-Sep-2025