எழும்பூர்
'கொடுங்கோளூர் அஞ்சைக் களம் செங்குன்னூர்' எனத்தொடங்கும் அப்பரின் பாடலில், ' இடும்பாவனம் எழுமூர், ஏழூர் தோழூர்' என, சிவதலங்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன. அப்பர் குறிப்பிடும் எழுமூர் சென்னை எழுமூரா, தஞ்சை எழுமூரா என்ற இருவேறு கருத்துகள் உள்ளன.திருவல்லிக்கேணியில் கிடைத்துள்ள 16ம் நூற்றாண்டுக் கல்வெட்டில் 'செயங்கொண்ட சோழமண்...த்தில் புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் திருவல்லிக்கேணி.... யசிங்க பெருமாள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கல்வெட்டு மூலம், எழுமூர் நாடு என்ற தலைமையின் கீழ் இருந்த நாட்டுப்பிரிவுகளுள் திருவல்லிக்கேணியும் ஒன்று எனத்தெரிகிறது. மயிலையின் ஒரு பகுதியாக இருந்து, பின் அதிலிருந்து பிரிந்து தனிக்குடியிருப்பானது எழுமூர். 13ம் நூற்றாண்டுக் கல்வெட்டில், 'புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் தெள்ளிய சிங்க நாயானர் திருவிடையாட்டமான புதுப்பாக்கத்தில்' என்ற செய்தி காணப்படுகிறது. திருஒற்றியூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில், 'எழுமூர்த்துடர் முனை நாட்டுக் காட்டுப்பாக்கம்','ஐயங்கொண்ட சோழமண்டலத்து விக்கிரம சோழ வளநாடான புழற்கோட்டத்து எழுமூர் துடர் முனைநாட்டுச் சேற்றுப்பேடு' என்ற வரிகள் காணக்கிடைக்கின்றன.பல்வேறு கல்வெட்டுகளிலும் எழுமூர் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆங்கிலேயரின் வருகையின் போதே, எழுமூர் சிறப்பான நிலையில் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டியபின், விரிவாக்கத்துக்காக 1693ல் எழுமூரைப் பெற்றுள்ளனர். எழுமூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளை ஆங்கிலேயர்கள் 'தி போர் ஓல்டு டவுன்ஸ்' எனக்குறிப்பிட்டுள்ளனர்.எதிரிகளைத் தடுப்பதற்கு விழிப்பறை(கண்காணிப்புக் கோபுரம்) கட்டத் தகுதியான மேடான இடம் எழும்பூரில் அமைந்திருப்பதாக ஆங்கிலேய அதிகாரி, தன் அரசுக்குத் தெரிவித்து இருக்கிறார். ஜெர்மானியர்கள் 'எக்கிமோர்' என, அழைத்திருக்கின்றனர்.ஏழு ஊர்களால் ஆனது எழும்பூர்; மேடான பகுதியில் அமைந்த ஊர் என்ற கருத்துகள் எழும்பூர் என்பதற்கான பெயர்க்காரணமாகச் சொல்லப்படுகின்றன. மேடான குடியிருப்பு என்ற காரணம் ஏற்புடையதாக இருக்கிறது.