உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்சார பஸ் சார்ஜிங் மையம் உளுந்துார்பேட்டையில் அமைப்பு

மின்சார பஸ் சார்ஜிங் மையம் உளுந்துார்பேட்டையில் அமைப்பு

சென்னை:தமிழக தேசிய நெடுஞ்சாலையில், மின்சார பஸ்களுக்கான முதல் 'சார்ஜிங்' மையம், உளுந்துார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில், இது பயன்பாட்டிற்கு வர உள்ளது. தமிழகத்தில், சென்னை - திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், பெங்களூரு போன்ற வழித்தடங்களில், 100 சொகுசு மின்சார ஆம்னி பஸ்களை இயக்கும் வகையில், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கடந்த மாதம், 31ம் தேதி ஒப்பந்தம் செய்தது. அதேநேரத்தில், தமிழகத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், 'ஹைஸ்பீடு சார்ஜிங்' மையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அரசுக்கு முன்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில், மின்சார பஸ்களுக்கான முதல், 'சார்ஜிங்' மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், 'இன்டர்சிட்டி' ஆம்னி மின்சார சொகுசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பஸ்சுக்கு ஒரு முறை சார்ஜிங் செய்தால், 380 கி.மீ., துாரம் செல்ல முடியும். முதல் கட்ட மாக, 100 மின்சார பஸ்களை இயக்க உள்ளோம். நெடுஞ்சாலைகளில் தேர்வு செய்யப்பட்ட, 18 இடங்களில், சார்ஜிங் வசதி ஏற்படுத்த, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது சங்கம் சார்பில், உளுந்துார்பேட்டையில் நெடுஞ்சாலை அருகே, 6,000 சதுர அடி இடத்தில், 2.50 கோடி ரூபாயில், மின்சார பஸ்களுக்கான முதல் 'சார்ஜிங்' மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இது, இரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்து விடும். இங்கு ஒரே நேரத்தில் நான்கு பஸ்களுக்கு, சார்ஜிங் செய்ய முடியும். ஒரு பஸ் பேட்டரி சார்ஜாக, 30 முதல், 40 நிமிடங்களாகும். மின்சார வாகனங்களின் தேவைக்கு ஏற்ப, சார்ஜிங் மையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி